பல்லாவரம்– குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை
பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள சாலையோர கடைகளில் நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
தாம்பரம்,
பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள சாலையோர கடைகளில் சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமனஅலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் பல்லாவரம் நகராட்சி ஆணையர் சிவகுமார் ஆகியோர் உத்தரவின் பேரில் பல்லாவரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் வேலவன், மறைமலை நகர் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பாலசுப்பிரமணி மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் லட்சுமிகணேசன், சுந்தர்ராஜன், சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழு நேற்று மாலை பல்லாவரம் ஸ்டேஷன் ரோடு முதல் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி ரோடு வரை சாலை ஓரங்களில் உள்ள ஓட்டல்கள், பழக்கடைகள் மற்றும் டீக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
உணவு பொருட்கள்
இந்த சோதனையின்போது அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா பொருட்கள், பழைய எண்ணையை மாற்றாமல் உபயோக படுத்துவது, வடை, போண்டா போன்ற பொருட்களை சுகாதாரமற்ற வகையில் வெளியில் வைத்து விற்பனை செய்யும் கடைகள், பாலித்தீன் கவர்கள் உபயோகப்படுத்தும் கடைகள், அரிசி கடைகளில் பிளாஸ்டிக் அரிசிகள் விற்கப்படுகிறதா? என திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர், 25 லிட்டர் பழைய எண்ணை பறிமுதல் செய்யப்பட்டது. வடை, போண்டா போன்ற பொருட்களை கடைகளில் வைத்து விற்பனை செய்யும்பொழுது சுத்தமான பொருட்களை கொண்டு பாதுகாத்து விற்பனை செய்யவும், சாலை ஓரங்களில் உள்ள பழக்கடைகளில் பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யக்கூடாது எனவும் உணவு பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல் கடைக்காரர்களுக்கு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story