பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2017 4:00 AM IST (Updated: 10 Jun 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் தஞ்சை ரெயிலடியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் மாநில இணைச் செயலாளர் ராமலிங்கம் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஜெயக்குமார், அமுதன், ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், மாநில கூடுதல் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியபடி எடை கருவி, ஏ.டி.எம். மூலம் சம்பளம், வருங்கால வைப்புநிதி குறித்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். நியாயவிலைக்கடை பணியாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் வருங்கால வைப்பு தொகையையும், நிர்வாகத்தின் பங்கையும் உரிய கணக்கில் செலுத்தி பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை தெரிவிக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக உள்ள
பொதுவினியோகத்திட்டத்திற்கென தனித்துறை உருவாக்கப்பட வேண்டும்.

ஓய்வூதியம்

தமிழகத்தில் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதைபோல் 35 ஆண்டுகள் நியாயவிலைக்கடைகளில் பணி புரிந்த பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். சம்பள முரண்பாடுகளை களைந்து அனைவருக்கும் சீரான சம்பளம் வழங்கப்பட வேண்டும். தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். நியாயவிலைக்கடைகளில் தேங்கி கிடக்கும் காலி சாக்குகளை விற்பனை செய்ய சீரான விற்பனை கொள்கை முடிவு வகுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன.
இதில் மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், இளவரசன், சுந்தரேசன், திருமேனி, அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.

Next Story