ஏரிகள், அணைகளில் வண்டல் மண் எடுக்கும் பணி குறித்து அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்


ஏரிகள், அணைகளில் வண்டல் மண் எடுக்கும் பணி குறித்து அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2017 4:15 AM IST (Updated: 10 Jun 2017 3:32 AM IST)
t-max-icont-min-icon

ஏரிகள், அணைகளில் வண்டல் மண் எடுக்கும் பணி குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் அணைகளில் வண்டல் மண் எடுக்கும் பணி குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி இதுவரை வண்டல் மண் எடுப்பதற்காக விண்ணப்பித்திருந்த விவசாயிகளின் எண்ணிக்கை, இவற்றில் வண்டல் மண் எடுக்க ஆணை வழங்கப்பட்ட விவரம், பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்கள் ஆகியவை குறித்து பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் கலெக்டர் சுப்பிரமணியன் கூறியதாவது:–

வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பெயரில் உள்ள நிலங்களை வகைபாடு, பரப்பு, வண்டல் மண் எடுக்க கோரியுள்ள ஏரியின் விவரம், உரிமை குறித்த கிராம நிர்வாக அலுவலரின் சான்று மற்றும் அடங்கல் நகலுடன் மனு செய்து தாசில்தாரிடம் வண்டல் மண் எடுப்பதற்கான ஆணையை பெற்றுக்கொள்ளலாம்.

அதிக மகசூல்

மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அணைகள், ஏரிகள் அனைத்திலும் இருந்தும் விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் தங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை எடுப்பதற்கு விண்ணப்பம் செய்து, அதனை பெற்று விவசாயத்திற்கு பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, திண்டிவனம் சப்–கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மகேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி, வேளாண் இணை இயக்குனர் கார்த்திகேயன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் மணிமொழி, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர்கள் ராஜா, சுந்தரேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story