திண்டுக்கல்லில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் வேருடன் பிடுங்கி நடப்பட்ட அரசமரம்
திண்டுக்கல்லில், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் வேருடன் பிடுங்கி நடப்பட்ட 60 ஆண்டு பழமையான அரசமரம்
திண்டுக்கல்
திண்டுக்கல் ஏ.எம்.சி. சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் 60 ஆண்டுகள் பழமையான பெரிய அரசமரம் நின்றது. இந்த நிலையில் அந்த இடத்தில், ஒரு வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இதனால் அந்த அரசமரத்தை வெட்டி அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், 60 ஆண்டுகளாக வளர்ந்து நிழல் கொடுத்து, பறவைகளுக்கு அடைக்கலம் அளித்த அந்த மரத்தை வெட்டி அழிப்பதில் யாருக்கும் உடன்பாடு இல்லை. எனவே, இதுகுறித்து திண்டுக்கல்லில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் திண்டிமாவனம் அமைப்பின் நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அந்த அரசமரத்தை வேருடன் பிடுங்கி, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மரத்தை சுற்றிலும் 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் ராட்சத கிரேன் மூலம் மரம் வேருடன் பிடுங்கப்பட்டு, லாரியில் ஏற்றப்பட்டது. மேலும் மரம் நின்ற இடத்தில் இருந்து 3 லாரிகளில் மண் அள்ளப்பட்டது.
இதையடுத்து அரசமரம், மண் ஆகியவை அங்கிருந்து கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சாக்குப்பைகளில் மாட்டு சாணத்தை பூசி, வேர் பகுதியை தவிர மரம் முழுவதும் சுற்றி கட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு 12 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி, கிரேன் உதவியுடன் மரம் நடப்பட்டது. அப்போது ஏற்கனவே அந்த மரம் நின்ற இடத்தில் அள்ளப்பட்ட 3 லாரிகளில் அள்ளப்பட்ட மண், நுண்ணூட்ட சத்துகள் நிறைந்த கலவை ஆகியவை பள்ளத்தில் போடப்பட்டன. மேலும் அந்த மரம் துளிர்க்கும் வகையில் தொடர்ந்து பராமரிப்பு செய்யப்பட இருக்கிறது. 60 ஆண்டுகள் பழமையான அரசமரத்தை வெட்டி அழிக்காமல், வேருடன் பிடுங்கி மற்றொரு இடத்தில் நடப்பட்ட சம்பவம் மரங்களின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் அமைந்தது.