விவசாய நிலத்தில் ரகசிய பூஜை நடத்தி குழிதோண்டிய மர்மநபர்கள் புதையலுடன் தப்பியோட்டமா?


விவசாய நிலத்தில் ரகசிய பூஜை நடத்தி குழிதோண்டிய மர்மநபர்கள் புதையலுடன் தப்பியோட்டமா?
x
தினத்தந்தி 10 Jun 2017 3:54 AM IST (Updated: 10 Jun 2017 3:54 AM IST)
t-max-icont-min-icon

பென்னாகரம் அருகே விவசாய நிலத்தில் ரகசிய பூஜை நடத்தி குழிதோண்டிய மர்மநபர்கள் புதையலுடன் தப்பி ஓடினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள எட்டிக்குட்டையை சேர்ந்தவர் ராஜா (வயது 40). தச்சுதொழிலாளி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் எட்டிக்குட்டைக்கும், காட்டுநாயக்கனஅள்ளிக்கும் இடையே உள்ளது.இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இவருடைய விவசாய நிலத்தின் ஒருபகுதியில் மர்மநபர்கள் ஆட்டை பலியிட்டு ரகசிய பூஜை நடத்தி உள்ளனர். அந்த பகுதியில் சுமார் 2½ அடி அகலமும், 4 அடி ஆழமும் கொண்ட குழியை தோண்டி உள்ளனர். பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.இந்த நிலையில் நேற்று ராஜா தனது விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அங்கு சிறப்பு பூஜை நடத்தி குழி தோண்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக பென்னாகரம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

புதையல் கிடைத்ததா?

இதையடுத்து பென்னாகரம் தாசில்தார் சேதுலிங்கம், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். புதையல் எடுக்கும் நோக்கத்துடன் ஆட்டை பலியிட்டு பூஜை நடத்தி குழி தோண்டப்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தோண்டப்பட்ட இடத்தில் புதையல் ஏதும் கிடைத்ததா? புதையலுடன் மர்மநபர்கள் தப்பியோடினார்களா? என விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக பருவதனஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் சங்கர் பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story