பிரிந்த தம்பதியை போலீசார் சேர்த்து வைத்தனர் கமி‌ஷனருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியுடன் தம்பதியினர் விடைபெற்றனர்


பிரிந்த தம்பதியை  போலீசார் சேர்த்து வைத்தனர் கமி‌ஷனருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியுடன் தம்பதியினர் விடைபெற்றனர்
x
தினத்தந்தி 10 Jun 2017 4:01 AM IST (Updated: 10 Jun 2017 4:01 AM IST)
t-max-icont-min-icon

பிரிந்த தம்பதியை போலீசார் சேர்த்து வைத்தனர் கமி‌ஷனருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியுடன் தம்பதியினர் விடைபெற்றனர்.

சென்னை, 

மும்பையை சேர்ந்த ஆஷியா (வயது 28) என்ற பெண், சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து பிரிந்து வாழும் தனது கணவரை சேர்த்து வைக்குமாறு மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

எனக்கு கடந்த 2009–ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவர் பெயர் ரஹீப் (33). 3½ வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணவர் மற்றும் மகனுடன் மும்பையில் சந்தோ‌ஷமாக வாழ்ந்தேன். மாமியார் பேச்சை கேட்டு எனது கணவர் என்னை கொடுமைப்படுத்தினார். இதனால் நான் எனது கணவரை பிரிந்து, மகனுடன் சென்னையில் உள்ள எனது பெற்றோருடன் வசிக்கிறேன். எனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். கணவரை என்னோடு சேர்ந்து வாழவைக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகிறேன்.

இவ்வாறு மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமி‌ஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் துணை கமி‌ஷனர் ஷியாமளாதேவி இதுபற்றி விசாரணை நடத்தினார்.

ஆஷியாவின் கணவர் ரஹீப்பை போலீசார் சென்னை வரவழைத்து கவுன்சிலிங் மூலம் ஆலோசனை வழங்கினார்கள். போலீசாரின் இந்த கவுன்சிலிங் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது.  பிரிந்து வாழ்ந்த மனைவி, மகனுடன் சேர்ந்து வாழ ரஹீப் சம்மதம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பிரிந்த தம்பதியினர் ஒன்றாக சேர்ந்தனர்.

பின்னர் தங்களை சேர்த்து வைக்க நடவடிக்கை மேற்கொண்ட போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு அவர்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்து மகிழ்ச்சியுடன் அவரிடம் இருந்து விடைபெற்றனர். பின்னர் மனைவி, மகனை அழைத்துக்கொண்டு ரஹீப் மும்பை புறப்பட்டுச் சென்றார்.

Next Story