நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கி வரும் பரிதாப நிலை: 40 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாத சாலை


நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கி வரும் பரிதாப நிலை: 40 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாத சாலை
x
தினத்தந்தி 10 Jun 2017 4:15 AM IST (Updated: 10 Jun 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கி வரும் பரிதாப நிலை: 40 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாத சாலையால் கிராம மக்கள் அவதி

கொலக்கம்பை

கொலக்கம்பை அருகே 40 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாத சாலையால் கிராமக்கள் அவதிப்படுகின்றனர். நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கி வரும் பரிதாபநிலை உள்ளது.

கிராம மக்கள்

கொலக்கம்பை அருகே உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட ட்ரூக், பக்காசூரன் மலை கிராமம், டேன்டீ குடியிருப்பு மற்றும் ஆதிவாசி கிராமமான செங்கல்புதூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி மாணவ, மாணவிகள் 5–ம் வகுப்பு வரை டரூக் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் படித்து விட்டு 6–ம் வகுப்புக்கு மேல் படிக்க சுமார் 4 கி.மீட்டர் தூரமுள்ள நான்சச் கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்குத்தான் வந்து செல்ல வேண்டும். இதனையடுத்து மேற்கண்ட கிராமங்களில் இருந்து குன்னூர், காட்டேரி, ஊட்டி, சேலாஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஏராளமானோர் வேலைகளுக்கு சென்று வருகின்றனர்.

இதனை தொடர்ந்து தமிழக அரசால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட பக்காசூரன் மலை காட்சி முனையும் இந்த பகுதியில் தான் உள்ளது. ஆனால் இது நாள் வரை இந்த பகுதிக்கு, எந்த சுற்றுலா பயணிகளும் வந்து சென்றதில்லை. இந்த கிராம மக்கள் நலன் கருதி குன்னூர் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தாலும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் சில இடங்களில் பஸ்சில் இருந்து இறங்கி நடந்து தான் செல்ல வேண்டும். இதற்கு காரணம் சீரான சாலை வசதி இல்லாதது தான் என்கின்றனர் அந்த பகுதிமக்கள்.மேலும் இது குறித்து பக்காசூரன்மலை கிராத்தை சேர்ந்த ஜெயபால், மாணவி கோபிகா, எக்ஸ்னோரா கண்ணன் ஆகியோர் கூறியதாவது:–

தொட்டில் கட்டி தூக்கி வரும் பரிதாபம்

நான்சச் பிரிவில் இருந்து பக்காசூரன் மலை கிராமம் வரை இடையே உள்ள 4 கி.மீட்டர் தூரமுள்ள சாலை கடந்த சுமார் 40 ஆண்டுகளுககு மேலாக குண்டும், குழியுமாக தான் உள்ளது. இந்த 4 கிமீட்டர் சாலையில் பல இடங்களில் பாறைகள், மண், சேறு– சகதிகள் உள்ளன. இதில்தான் பஸ்போக்குவரத்து நடந்து வருகிறது. மேலும் அரசு பஸ்சை தவிர வேறு வாகனங்கள் இந்த சாலையில் வந்து செல்வதில்லை. இதனால்அவசர தேவைகளுக்கு கூட வேறு வாகன ஓட்டிகள், வாகனங்களை இயக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அந்த கிராமங்களில் உள்ளவர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களை ஆஸ்பத்திரிக்கு வாகனங்களில் விரைவாக கொண்டு செல்ல முடிவதில்லை. நோய்வாய்ப்பட்டவர்களையும், கர்ப்பிணி பெண்களையும் தொட்டில் கட்டி தான் நான்சச் வரை தூக்கிக் கொண்டு வந்து அங்கிருந்து குன்னூர், ஊட்டி, கொலக்கம்பை, உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய பரிதாப நிலையில் உள்ளனர்.

மேலும் இந்த சாலையில் உள்ள அபாயகரமான குழிகளால் இந்த கிராமங்களுக்கு வந்து செல்லும் ஒரு அரசு பஸ்சும், அடிக்கடி பழுதாகி பாதி வழியிலேயே நின்று விடுகிறது. மழை காலங்களில் சாலை எது? நீரோடை எது? என தெரியாத நிலையில் இந்த சாலை மாறிவிடும் என்பதால், இது போன்ற காலங்களில் பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்படும். அது போன்ற காலங்களில் இப்பகுதி மக்கள் பஸ் மற்றும் வாகனங்கள் கிடைக்காமல் படும்பாடு சொல்ல முடியாத அளவில் உள்ளது. எனவே கட்ந்த பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் சார்பில் பல முறை சம்மந்தப்பட்ட மத்திய, மாநி அரசுகளுக்கும், மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்தும், பலகட்ட நேரடி போராட்டங்களில் ஈடுப்பட்டும் வந்த நிலையில் அப்போது மட்டும் அரசு துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பொதுமக்களை அழைத்து பேசுவதுண்டு. ஆனால் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

விரைவான நடவடிக்கை

மேலும் இந்த சாலையில் 500 மீட்டர் தூரத்தில் உள்ள இடம் மட்டும் உலிக்கல் பேரூராட்சிக்கு சொந்தானது. அது மட்டும் ரூ.33 லட்சம் செலவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேரூராட்சி மூலம் சீரமைக்கப்பட்டது. மீதமுள்ள சாலை இது வரை கேள்வி குறியாக தான் உள்ளது. ஆகவே இந்த சாலைப்பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்கள்.

இது குறித்து முன்னாள் பேரூராட்சி தலைவர் தமிழ்செல்வன் கூறியதாவது:– கடந்த 40 ஆண்டுகாலமாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது போக்குவரத்துக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சாலைக்கான இடம், தேயிலை எஸ்டேட் நிர்வாகத்துக்கு சொந்தமானது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மூலம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி எஸ்டேட் நிர்வாகம், அந்த இடத்தை அரசுக்கு வழங்க ஒப்புதல் அளித்தது. ஆனால் மாவட்ட நிர்வாகம் அந்த சாலை மேம்பாட்டுக்கான நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. ஆகவே இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்தால் அந்த பகுதி கிராமக்களுக்கு போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.

இவ்வாறு அவர்கூறினார்.


Next Story