வேம்பாக்கவுண்டன்புதூரில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் ஆய்வு


வேம்பாக்கவுண்டன்புதூரில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 10 Jun 2017 4:13 AM IST (Updated: 10 Jun 2017 4:13 AM IST)
t-max-icont-min-icon

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மத்துருட்டு ஊராட்சி வேம்பாக்கவுண்டன்புதூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் ஆய்வு செய்தார்.

நாமக்கல்,

ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மத்துருட்டு கிராமம் திம்மநாய்க்கன்பட்டி அருகில் உள்ள வேம்பாக்கவுண்டன்புதூரில் இன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணியளவில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு, முன்னேற்பாடு பணிகளை குறித்து ஆய்வு செய்தார்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதை கண்காணிப்பதற்கு மாவட்ட அளவிலான ஜல்லிக்கட்டுக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மாவட்ட அளவிலான ஜல்லிக்கட்டு குழுவில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட அளவிலான குழுவோடு இணைந்து மத்துருட்டு கிராமம் வேம்பாக்கவுண்டன்புதூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா? என்பது குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்

இந்த ஆய்வு குறித்து கலெக்டர் ஆசியா மரியம் கூறியதாவது:-

அரசு விதித்து உள்ள அடிப்படை விதிகள் மற்றும் சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதி மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படுகின்றது. எனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசு விதித்து உள்ள அனைத்து விதிமுறைகளையும், சட்ட திட்டங்களையும் முழுமையாக பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டுமென ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் முழுமையாக மேற்பார்வையிடும்.

இவ்வாறு கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி, நாமக்கல் உதவி கலெக்டர் ராஜசேகரன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அழகப்பன், ராசிபுரம் தாசில்தார் ரத்தினம், பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்பட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் உடன் சென்றனர்.

Next Story