கோவையில் 30 இடங்களில் காற்று மாசுபடுவதை கண்காணிக்கும் கருவிகள் அமைக்கப்படுகிறது


கோவையில் 30 இடங்களில் காற்று மாசுபடுவதை கண்காணிக்கும் கருவிகள் அமைக்கப்படுகிறது
x
தினத்தந்தி 10 Jun 2017 4:30 AM IST (Updated: 10 Jun 2017 4:17 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் காற்று மாசுபடுவதை கண்காணிக்க 30 இடங்களில் நவீன கருவிகள் அமைக்கப்படுகிறது.

கோவை,

மத்திய அரசு கடந்த 2015–ம் ஆண்டு ஜூன் 25–ந் தேதி இந்தியாவில் 60 நகரங்கள் திறன்மிகு நகரங்களாக(ஸ்மார்ட் சிட்டி) தேர்ந்தெடுத்து அறிவித்தது. அதில் கோவை மாநகரமும் ஒன்று. மத்திய அரசு திறன் மிகு நகரங்களை தேர்ந்தெடுத்து வருகிற 25–ந் தேதியோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்தியா முழுவதும் உள்ள 60 திறன்மிகு நகரங்களில் அதன் திட்டங்களை டெல்லியில் இருந்தவாறு பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி கோவையில் அந்த திட்டங்களில் ஒன்றான காற்று மாசுபடுவதை கண்காணிக்கும் கருவிகளின் செயல்பாடுகள் தொடங்கி வைக்கப்படுகிறது. கோவை மாநகரில் 30 இடங்களில் இந்த நவீன கருவி அமைக்கப்படுகிறது.

காற்று மாசுபடுவது எப்படி?

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

மத்திய அரசின் திறன்மிகு நகர திட்டங்களில் ஒன்றான காற்று மாசுபடுவதை கண்காணிக்கும் கருவிகள் கோவையில் அமைக்கப்படுகிறது. கோவை நகரை தூய்மை நகரமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாநகரில் முக்கிய சிக்னல் சந்திப்புகளான ஹோப் காலேஜ், உக்கடம் பஸ் நிலையம் முன்பு, லட்சுமி மில் சந்திப்பு உள்பட 30 இடங்களில் இந்த கருவி அமைக்கப்படுகிறது. சிக்னல் சந்திப்புகளில் இந்த கருவியை வைக்கப்படுவது எதற்காக என்றால் அங்கு தான் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் வந்து நிற்கும். வாகனங்களிலிருந்து வெளியேறும் கார்பன் மோனாக்சைடு, கந்தகம் போன்ற நச்சு வாயுக்கள் எந்த அளவு காற்றில் கலந்துள்ளன? என்பதை இந்த கருவி கண்டறியும். அதில் காற்றில் குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக நச்சு வாயுக்கள் இருந்தால் அதை சரி செய்வது எப்படி என்பது பற்றி அடுத்த கட்டமாக ஆய்வு செய்யப்படும்.

கோவை நகரில் காற்று இரண்டு முறைகளில் மாசுபடுகிறது. ஒன்று வாகனங்கள் விடும் நச்சு வாயுக்கள் மூலம். அடுத்து தொழிற்சாலைகள் விடும் நச்சுவாயுக்கள். கோவையில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. இதனால் வாகனங்கள் புகை மூலமே காற்று மாசுபடுகிறது. இதை அளவிடுவதற்காக தான் இத்தகைய கருவிகள் பொருத்தப்படுகின்றன.

செங்குத்தான தோட்டங்கள்

எந்த சிக்னல் சந்திப்பில் அதிக அளவு காற்று மாசுபடுகிறது என்று கண்டறிந்து அதை தடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். நச்சு வாயுக்களால் காற்று மாசுபடுவதை தடுப்பதற்கு ஒரே வழி தாவரங்களை அதிக அளவில் வளர்ப்பது தான். அதன்படி சாலையோரம் அதிக செடிகள் வளர்க்க முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால் கோவை நகரில் உள்ள சாலைகள் குறுகலாக இருப்பதால் அதில் செடிகள் வளர்ப்பது என்பது இயலாத காரியம்.

எனவே எங்கெல்லாம் இடங்கள் மற்றும் வாய்ப்பு உள்ளதோ அந்த இடங்களில் செடிகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த பாலங்களை தாங்கி பிடிக்கும் கான்கிரீட் தூண்களை சுற்றிலும் செங்குத்தான(வெர்ட்டிக்கிள் கார்டன்)தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது சிறிய பூந்தொட்டிகளில் நச்சு வாயுக்களை அதிகம் உறிஞ்சி மனிதனுக்கு தேவையான ஆக்சிஜனை வெளிவிடும் சிறிய தாவரங்கள் வளர்க்கப்படும். இந்த செடிகள் வாகனங்கள் வெளிவிடும் நச்சுவாயுக்களை உறிஞ்சும்போது அந்த இடத்தில் காற்று மாசுபடுவது குறையும். பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்தான தோட்டங்களை கோவை காந்திபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் தூண்களை சுற்றிலும் வளர்ப்பதின் மூலம் கோவையில் காற்று மாசுபடுவதை தடுக்க முடியும். அத்தகைய தோட்டங்களை அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story