தனியார் பள்ளிகள் அனுமதிக்க மறுத்ததால் பணி ஆணை இருந்தும் காத்து கிடக்கும் சத்துணவு ஊழியர்கள்


தனியார் பள்ளிகள் அனுமதிக்க மறுத்ததால் பணி ஆணை இருந்தும் காத்து கிடக்கும் சத்துணவு ஊழியர்கள்
x
தினத்தந்தி 10 Jun 2017 4:30 AM IST (Updated: 10 Jun 2017 4:30 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் நியமனம் செய்த சத்துணவு ஊழியர்களை தனியார் பள்ளி நிர்வாகம் அனுமதிக்காததால், பணி ஆணை இருந்தும் சத்துணவு ஊழியர்கள் ஒன்றிய அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. அனுமதி மறுப்பு ராஜபாளையத்தை சுற்றி உள்ள அரசு உதவி பெறும் தனியார் மற்ற

ராஜபாளையம்,

கலெக்டர் நியமனம் செய்த சத்துணவு ஊழியர்களை தனியார் பள்ளி நிர்வாகம் அனுமதிக்காததால், பணி ஆணை இருந்தும் சத்துணவு ஊழியர்கள் ஒன்றிய அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

அனுமதி மறுப்பு

ராஜபாளையத்தை சுற்றி உள்ள அரசு உதவி பெறும் தனியார் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் செயல்படுத்தப்படும், சத்துணவு திட்டத்திற்காக, சமையல் கூடங்களில் காலியாக உள்ள 57 சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் 85 சமையல் உதவியாளர்கள் பணியிடங்கள் கடந்த மாதம் நிரப்பப்பட்டன. இவர்களுக்கான பணி ஆணையை கடந்த மாதம் 23–ந்தேதி கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

இவர்களில் 45 சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் 85 சமையல் உதவியாளர்கள் கடந்த 7–ந்தேதி முதல் வேலைக்கு செல்கின்றனர். ஆனால் ராஜபாளையம், முகவூர், கிருஷ்ணாபுரம், ஆவரம்பட்டி, பொட்டல்பட்டி, சங்கரலிங்காபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இயங்கும் 12 தனியார் பள்ளிகளில் பணிபுரிய ஆணை பெற்ற 12 சத்துணவு பணியாளர்கள் பள்ளிக்கு சென்றனர். அவர்களை பள்ளி நிர்வாகம் உள்ளே அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டன.

பேச்சுவார்த்தை

மீண்டும் அவர்கள் பணிக்கு சென்ற போது, அரசு நியமனம் செய்த சத்துணவு பணியாளர்களை தடை செய்ய, நீதி மன்றத்தின் மூலம் தடையாணை பெற்று விட்டதாக கூறப்பட்டது. மேலும் தங்களுக்கு தேவையான அமைப்பாளர்களை தாங்களே தேர்வு செய்ய போவதாக தெரிவித்து மீண்டும் அவர்களை திருப்பி அனுப்பி உள்ளனர்.

இதையடுத்து கடந்த 3 தினங்களாக பணி ஆணை பெற்ற 12 பேரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்ததில் காத்திருக்கின்றனர். அரசு அதிகாரிகள் விரைவில் தகுந்த நடவடிக்கை எடுத்து தங்களை பணிக்கு அனுப்புமாறு சத்துணவு அமைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:– நேற்று கல்வி அதிகாரிகளுடன், நானும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று, பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் 6 பேர் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மீதம் உள்ள பணியாளர்கள் வேலைக்கு செல்ல விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story