சங்ககிரி அருகே மொபட் மீது பஸ் மோதல்: ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் பரிதாப சாவு-மனைவி படுகாயம்


சங்ககிரி அருகே மொபட் மீது பஸ் மோதல்: ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் பரிதாப சாவு-மனைவி படுகாயம்
x
தினத்தந்தி 10 Jun 2017 4:39 AM IST (Updated: 10 Jun 2017 4:38 AM IST)
t-max-icont-min-icon

சங்ககிரி அருகே மொபட் மீது பஸ் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

சங்ககிரி,

சேலம் மாவட்டம் சங்ககிரி ஆர்.எஸ். தமிழ்நாடு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் சையத்காமில் (வயது 67). இவர் வடுகப்பட்டி சுகாதார ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். நேற்று மதியம் 12 மணியளவில் இவர் தனது மனைவி மெஹருனிஷாவுடன் (60) ஒரு மொபட்டில் சங்ககிரியில் இருந்து பவானி நோக்கி சென்றார்.

வழியில் அங்குள்ள வசந்தம் காலனி பெட்ரோல் பங்க்கில் மொபட்டை நிறுத்தி அவர் பெட்ரோல் அடித்தார். பின்னர் அங்கிருந்து நாகிசெட்டிப்பட்டி தனியார் மெட்ரிக் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் தனது பேத்தி சுனைஹாபாத்திமாவுக்கு கல்வி கட்டணம் கட்டுவதற்கு அந்த பள்ளிக்கு புறப்பட்டார். இதற்காக அவர் தனது மனைவியுடன் மொபட்டில் பவானி சாலையை கடந்து சென்றார்.

பஸ் மோதியது

அப்போது பின்னால் வந்த ஒரு தனியார் பஸ் திடீரென அவர்களின் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சையத்காமில், அவருடைய மனைவி மெஹருனிஷா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே சையத்காமில் பரிதாபமாக உயிரிழந்தார். மெஹருனிஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பேத்திக்கு கல்வி கட்டணம் கட்ட பள்ளிக்கு சென்றபோது விபத்தில் சிக்கி சையத்காமில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story