தமிழ்நாடு தனியார் மருத்துவமனை டாக்டர்கள் மாநில மாநாடு இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது


தமிழ்நாடு தனியார் மருத்துவமனை டாக்டர்கள் மாநில மாநாடு இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது
x
தினத்தந்தி 10 Jun 2017 5:34 AM IST (Updated: 10 Jun 2017 5:34 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு தனியார் மருத்துவமனை டாக்டர்கள் மாநாடு ஈரோட்டில் இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

ஈரோடு, 

இந்திய மருத்துவ சங்கத்துக்கு உள்பட்ட அமைப்பாக தமிழ்நாடு தனியார் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் மாநில செயலாளர் டாக்டர் சி.என்.ராஜா ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு தனியார் மருத்துவமனை கூட்டமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தற்போது முதன் முதலாக மாநில அளவிலான மாநாடு ஈரோடு கிளப் மெலான்ஞ் ஓட்டலில் வருகிற 10-ந் தேதி (இன்று), 11-ந் தேதி (நாளை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

எங்கள் கூட்டமைப்பில் 4 ஆயிரத்து 500 தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளன. இந்த ஆஸ்பத்திரிகள் அனைத்தும் ஒரே டாக்டரால் 10 முதல் 50-க்கும் உள்பட்ட படுக்கைகளுடன் இயங்கி வருபவை. சமீப காலங்களாக தனியார் மருத்துவமனைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து உள்ளன. இதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தனியார் ஆஸ்பத்திரிகளையும், டாக்டர்கள் உள்ளிட்ட பணியாளர்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

டாக்டர்கள்

இதன் தொடக்க விழாவில் கோவை மேற்கு மாவட்ட போலீஸ் ஐ.ஜி. பாரி கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் மருத்துவமனைகள் தொடர்பான பிரச்சினைகள், நோயாளிகளுக்கான காப்பீட்டு திட்டங்கள், மருத்துவக்கழிவு மேலாண்மை, மருத்துவமனை தரம் உயர்வு, நோயாளிகள் பாதுகாப்பு, தீவிபத்து உள்ளிட்ட நெருக்கடி காலங்களில் நிலமையை சமாளித்தல், மருத்துவக்கருவிகளின் தரத்தை உயர்த்துதல் பற்றிய தலைப்புகளில் இந்திய மருத்துவ சங்க பிரதிநிதிகள், காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பேசுகிறார்கள். டாக்டர்கள் கட்டுரைகளும் சமர்ப்பிக்கிறார்கள்.

இந்திய மருத்துவ சங்க அகில இந்திய தலைவர் டாக்டர் ரவிவெங்கட்கர், துணைத்தலைவர் டாக்டர் கே.பிரகாசம், செயலாளர், டாக்டர் ஜெயேஸ் லீலே, பொருளாளர் டாக்டர் மங்கேஷ் பாண்டே, தமிழக தலைவர் டாக்டர் ரவிசங்கர், செயலாளர் டாக்டர் முத்துராஜன் மற்றும் தமிழ்நாடு தனியார் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ஜெ.ஏ.ஜெயலால் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு தமிழ்நாடு தனியார் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு செயலாளர் டாக்டர் சி.என்.ராஜா கூறினார். 

Next Story