உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்று வந்த மாணவி திடீர் சாவு 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் மீது வழக்கு
கவுந்தப்பாடி அருகே உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்று வந்த மாணவி திடீரென இறந்தார். இதுதொடர்பாக போலீசார் 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கவுந்தப்பாடி,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பச்சினம்பட்டியை சேர்ந்தவர் சக்தி(வயது 42). அரசு பஸ் கண்டக்டராக உள்ளார். அவருடைய மனைவி மங்கையர்கரசி(36). கோர்ட்டில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவர்களுடைய ஒரே மகள் பாக்யஸ்ரீ (17) அந்த பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து முடித்துவிட்டு 2-ம் ஆண்டு செல்ல இருந்தார்.
பாக்யஸ்ரீ 60 கிலோ எடை இருந்தார். அதனால் தன்னுடைய உடல் எடையை குறைக்க வேண்டும் என்று எண்ணினார். தன்னுடைய விருப்பத்தை பெற்றோரிடமும் தெரிவித்தார். அவர்கள் 60 கிலோ என்பது அதிக எடை கிடையாது என்று கூற, அதை ஏற்க மறுத்த பாக்யஸ்ரீ ஆஸ்பத்திரியில் சேர்ந்து எடையை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவருக்கு ஏற்கனவே கண்பார்வை குறைபாடும், தீராத சளித்தொல்லையும் இருந்துள்ளது.
உடல் எடையை குறைக்க...
சக்தியின் உறவினர் நவீன்பாலாஜி என்பவர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள கந்தசாமியூரில் இயற்கை மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையில் கடந்த 2-ந் தேதி பாக்யஸ்ரீயின் உடல் எடையை குறைப்பதற்காக அவருடைய பெற்றோர் சேர்த்தனர். அவர்களும் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தனர். டாக்டர் நவீன்பாலாஜி பாக்யஸ்ரீக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
இதற்கிடையே மங்கையர்கரசியின் தம்பி திருமணம் கடந்த 7-ந் தேதி நடந்தது. பாக்யஸ்ரீயை தானே பார்த்துக்கொள்வதாக நவீன்பாலாஜி கூறியுள்ளார். இதனால் சக்தியும், மங்கையர்கரசியும் திருமணத்துக்கு சென்றுவிட்டனர்.
திடீர் சாவு
இந்தநிலையில் சிகிச்சைபெற்று வந்த பாக்யஸ்ரீ நேற்று முன்தினம் காலை திடீரென இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி பணியாளர்கள் பாக்யஸ்ரீயின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி அவருடைய பெற்றோர் வீட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு திருமணம் முடிந்ததும் மகளை மருத்துவமனையில் சென்று பார்ப்பதற்காக சக்தியும், மங்கையர்கரசியும் புறப்பட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது வீட்டுக்குள் மருத்துவமனை பணியாளர்கள் பாக்யஸ்ரீயின் உடலை கொண்டுவந்து வைத்துவிட்டு அவருடைய பெற்றோரிடம், ‘உங்கள் மகள் இறந்து விட்டார் என்று கூறிவிட்டுச் சென்றார்கள்.
சாவில் சந்தேகம்
ஒரே ஆசை மகளை பார்ப்பதற்காக புறப்பட்ட பெற்றோர் அவர் பிணமாக கொண்டு வரப்பட்டதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்கள். சிறிதுநேரம் அவர்கள் ஒன்றும் புரியாமல் அலறி துடித்தார்கள். பின்னர் உறவினர்களுடன் ஒரு ஆம்புலன்சில் பாக்யஸ்ரீயின் உடலை ஏற்றி மீண்டும் கந்தசாமியூரில் இருக்கும் நவீன்பாலாஜியின் மருத்துவமனைக்கே கொண்டு சென்றார்கள். உடலை ஆஸ்பத்திரிக்குள் வைத்து முற்றுகையிட்டார்கள்.
பின்னர் கவுந்தப்பாடி போலீசில் இதுகுறித்து மங்கையர்கரசி புகார் அளித்தார். அதில் ‘என்னுடைய மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. தவறான சிகிச்சையால்தான் என் மகள் இறந்துவிட்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறி இருந்தார்.
மருத்துவமனை நிர்வாகி மீது தாக்குதல்
அதைத்தொடர்ந்து கவுந்தப்பாடி போலீசார் மருத்துவமனைக்கு சென்று பாக்யஸ்ரீயின் உடலை கைப்பற்றி துல்லிய பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குவிந்து இருந்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளுமாறு டாக்டர்கள் கூறினார்கள். பாக்யஸ்ரீயின் சாவுக்கு காரணமான டாக்டர்கள் மீதும், தனியார் மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்காதவரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று பெற்றோரும், உறவினர்களும் தெரிவித்தனர். மருத்துவமனை நிர்வாகி நவீன் பாலாஜி மற்றும் சிகிச்சை அளித்த டாக்டர் கல்பனா ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது மாணவியின் உறவினர்களுக்கும், மருத்துவமனை உரிமையாளர் நவீன் பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவரை தாக்க முயன்றனர். போலீசார் அவரை உறவினர்களிடம் இருந்து மீட்க முயன்றும் அவர் மீது அடி விழுந்தது. இதன்பின்னர் போலீசார் கூட்டத்தில் இருந்து நவீன் பாலாஜியை மீட்டு பத்திரமாக அழைத்துச்சென்றனர்.
மாணவியின் இறப்பு குறித்து நவீன் பாலாஜி கூறும்போது, நான் மருத்துவமனை நிறுவனர்தான். சிகிச்சை அளித்த டாக்டர் வேறு. மாணவிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அவரை காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனது என்று தெரிவித்தார்.
மாணவியின் தந்தை சக்தி கூறும்போது, ஒரே மகளை பறிகொடுத்து நிர்கதியாக நிற்கிறேன். இதுபோன்று யாருக்கும் வரக்கூடாது. சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து உடலை பெற்றுச்சென்றனர்.
8 பேர் மீது வழக்குப்பதிவு
இதற்கிடையில் பாக்யஸ்ரீக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கல்பனா, நிவேதினி, மருத்துவமனை நிறுவனர் டாக்டர் நவீன் பாலாஜி மற்றும் மாலதி, வர்மா, பணியாளர்கள் பிரியதர்ஷினி, தேவிமோகன், ஜோதி என 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பிரேத பரிசோதனை முடிவு வந்தபிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே மருத்துவமனையை அதன் நிர்வாகிகளே பூட்டி விட்டனர்.
உடல் எடையை குறைக்க சிகிச்சை எடுத்ததால் ஒரே மகளையும் இழந்த சக்தியும், மங்கையர்கரசியும் ஆஸ்பத்திரியில் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது.
Related Tags :
Next Story