ஜூலை 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தகவல்


ஜூலை 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தகவல்
x
தினத்தந்தி 10 Jun 2017 5:43 AM IST (Updated: 10 Jun 2017 5:43 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மேற்கொள்ளப்படும் என்று புதுவை தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் 18 வயது நிறைவடைந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பொருட்டு அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு பணியினை மேற்கொள்ள உத்தரவிட்டு உள்ளது. அதேபோல் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்களை நீக்கவும் ஆணையிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியின்போது ஏற்கனவே பட்டியலில் சேர்க்காமல் விடுபட்ட தகுதி வாய்ந்த வாக்காளர்களும், 1-1-2017 அன்று 18 வயது நிறைவடைந்த வாக்காளர்களும் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ள படிவம் 6-ஐ அந்தந்த வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகத்திலோ, தபால் மூலமாகவோ, தேசிய வாக்காளர் சேவை இணையதளத்தின் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

சிறப்பு முகாம்

அடுத்த மாதம் 9, 23 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) அனைத்து வாக்குச் சாவடிகளின் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர்களிடம் படிவம் 6-ஐ பெற்றுக்கொள்வார்கள். மேலும் அனைத்து கல்லூரிகளிலும் 18 வயது நிறைவடைந்த மாணவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பொருட்டு 2 சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

வருகிற 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ள தேதிகளை தவிர்த்து, வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் வீடு வீடாக சென்று விடுபட்ட தகுதிவாய்ந்த வாக்காளர் மற்றும் 18 வயது நிறைவடைந்த வாக்காளர்களிடம் படிவம் 6-ஐ பெற்றுக்கொள்வார்கள். இந்த பணியில் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் உதவியாக இருப்பார்கள்.

இலவச தொலைபேசி எண்

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் உள்ள வாக்காளர் சேவை செயலி மூலமாகவும் வாக்காளர்கள் படிவம் 6-ஐ சமர்ப்பிக்கலாம். மாநில அழைப்பு மையத்தின் இலவச தொலைபேசி எண் 1950-ஐ தொடர்பு கொண்டு படிவம் 6-ஐ சமர்ப்பிக்க விவரங்கள் பெறலாம். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவும், தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் பெற வரும் மாணவர்களின் வசதிக்காக அந்தந்த அலுவலகத்தில் படிவம் 6-ஐ பெற சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் சென்டாக் மற்றும் கலைக் கல்லூரிகளில் நடைபெறும் நேர்காணலுக்கு வரும் மாணவர்களிடம் படிவம் 6-ஐ வழங்குவதற்கும், பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த பணியின்போது பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களிடம் பெறப்பட்ட இறந்த வாக்காளர்களின் பெயர் நீக்கப்படும். இறந்தவர்கள் பெயர்கள் ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க எதிர்ப்பு (படிவம்-7) வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய (படிவம்-8) மற்றும் தொகுதிக்குள் இடம் மாறுபவர்கள் (படிவம்-8ஏ) ஆகியவற்றின் மீது இந்த சிறப்பு பணி முடிந்தபின் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தலைமை தேர்தல் அதிகாரிகள் கந்தவேலு தெரிவித்துள்ளார் 

Next Story