விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரெயில் மறியல்;40 பேர் கைது


விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரெயில் மறியல்;40 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2017 5:47 AM IST (Updated: 10 Jun 2017 5:47 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் போலீசாரால் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து புதுவையில் இளைஞர் காங்கிரசார் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 1-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக கடந்த 6-ந் தேதி நடந்த விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 விவ சாயிகள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தடையை மீறி சென்ற காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியை போலீசார் கைது செய்தனர்.

ரெயில் மறியல்

மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்தும், இதில் பலியான 5 விவசாயிகள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது.

புதுவை வானரப்பேட்டை ரெயில்வேகேட் அருகே நடந்த போராட்டத்திற்கு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், இளைஞர் காங்கிரசார் கலந்துகொண்டனர். அவர்கள் திருப்பதியில் இருந்து புதுவை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

40 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஒதியஞ்சாலை போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

அதையடுத்து மறியல் போராட்டத்தல் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story