திருவண்ணாமலையில் மத்திய அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சி


திருவண்ணாமலையில் மத்திய அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சி
x
தினத்தந்தி 10 Jun 2017 6:01 AM IST (Updated: 10 Jun 2017 6:01 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் மத்திய அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சியினை மாவட்ட வருவாய் அலுவலர் பழனி திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் விழா (மோடி விழா) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா 2-வது கட்டமாக தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் நேற்று தொடங்கியது.

திருவண்ணாமலை காந்தி நகர் மைதானத்தில் இந்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் (சென்னை) சார்பில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் விழா மற்றும் மத்திய அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சியின் தொடக்க விழா நடந்தது. திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, நகராட்சி கமிஷனர் பாரிஜாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசின் கள விளம்பரதுறை அலுவலர் சண்முகம் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் பழனி கலந்துகொண்டு சாதனை விளக்க கண்காட்சியை திறந்து வைத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு பேசியதாவது:-

மத்திய அரசின் திட்டங்கள்

மத்திய அரசின் ஜன்தன் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் ஆகிய திட்டங்களை முன்னிலைப்படுத்தும் அரங்குகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் டிஜிட்டல் வகையிலான முயற்சிக்கு இணங்க பொத்தானை அழுத்தியதும் அரசினால் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து திட்டவாரியான தகவல்கள் கண்காட்சிக்கு வருபவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதேபோன்று தனி நபர்களின் தேவைக்கு ஏற்ப திட்டவாரியான தகவல்களை அதற்கென அமைக்கப்பட்டுள்ள தகவல் அரங்குகள் வழங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி, தாசில்தார் ரவி, பா.ஜ.க. மாநில விவசாய செயற்குழு தலைவர் ஏ.ஜி.காந்தி, கோட்ட அமைப்பு செயலாளர் ரமேஷ், மாவட்ட தலைவர் நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மோடி திருவிழா திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் நன்றி கூறினார்.

Next Story