3.அம்பேத்கர்: மாற்றத்தின் நாயகனுக்கு மக்களின் பரிசு!
நீங்கள் நன்றாக அறிந்தவர்கள் பற்றி, அறிந்திரா செய்திகளைத் தருவதே ‘ரகசியமான ரகசியங்கள்’. இத்தொடரில் அம்பேத்கரைப் பற்றிய அபூர்வ தகவல்கள் இடம்பெற்று வருகிறது.
நீங்கள் நன்றாக அறிந்தவர்கள் பற்றி, அறிந்திரா செய்திகளைத் தருவதே ‘ரகசியமான ரகசியங்கள்’. இத்தொடரில் அம்பேத்கரைப் பற்றிய அபூர்வ தகவல்கள் இடம்பெற்று வருகிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி தொகுதி வேண்டும் என்ற அம்பேத்கரின் கோரிக்கையும் அதற்கு எழுந்த எதிர்ப்பைப் பார்த்தோம். அதன்பிறகு நடந்தது என்ன? இரண்டு முறை அம்பேத்கர் தேர்தலில் தோல்வியைத் தழுவியது ஏன்? இனி பார்ப்போம்.
வட்ட மேசை மாநாட்டில் காந்திக்கும் அம்பேத்கருக்கும் நேரடி மோதல் ஏற்பட்ட பிறகு 1932–ல் பிரிட்டன் பிரதமரின் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு மாநில சட்டமன்றங்களில் தனித்தொகுதிகள் ஒதுக்கப்படும். ‘தங்களுக்கான பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கு; பொதுப்பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கு’ என்ற முறை கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
தன் எதிர்ப்பை மீறி அம்பேத்கரின் கோரிக்கையை அரசு ஏற்றதால் காந்தியடிகள் கொதித்தெழுந்தார். அரசின் அறிவிப்பை ஏற்க மறுத்து புனே நகரில் காலவரையற்ற உண்ணாவிரத்தைத் தொடங்கினார். கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் அவரது உண்ணாவிரதம் தொடர்ந்தது.
காந்தியின் உடல்நிலை பற்றிய செய்திகளால் நாடு முழுவதும் பதற்றம் பற்றிக்கொண்டது. ‘காந்திக்கு ஏதாவது ஆகிவிட்டால்... அவ்வளவுதான்...’ என்று தாழ்த்தப்பட்ட மக்களின் மீது கலவர மேகம் சூழ்ந்தது. ‘ராட்சசன்’, ‘துரோகி’, ‘கருங்காலி’ என்றெல்லாம் அம்பேத்கரைத் தூற்றினர்.
‘‘நாட்டின் சுதந்திரத்திற்காகவோ, தீண்டாமையை ஒழிப்பதற்காகவோ காந்தியார் உண்ணாவிரதம் இருந்தால் நியாயமாக இருக்கும். தனித்தொகுதி தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் தரப் படவில்லை. இந்தியக் கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் சீக்கியர்களுக்கும் தரப்பட்டுள்ளது’’ என்று தொடக்கத்தில் வேகம் காட்டினாலும் நாளுக்கு நாள் நிலைமை மோசமாவதை எண்ணி அம்பேத்கர் யோசித்தார்.
‘அப்பாவின் உயிரைக் காப்பாற்றுங்கள்’ என்று மகாத்மாவின் மகன் தேவதாஸ் காந்தி அம்பேத்கரிடம் நேரில் கோரிக்கை விடுத்தார். முழுக்கவும் தாழ்த்தப்பட்டோருக்கான தனித்தொகுதி என்பதற்குப் பதிலாக அவர்களும் பொதுப்பிரிவினரும் தேர்ந்தெடுக்கப்படும் கூட்டுத்தொகுதி முறையை ஏற்றுக் கொள்வதாக காந்தியும் இறங்கி வந்தார்.
இதையடுத்து காந்தியைச் சிறையில் சென்று சந்தித்தார், அம்பேத்கர். ‘எங்கள் மக்களுக்கு நீங்கள் நியாயம் செய்யவில்லை’ என்று காந்தியிடம் சொன்னார். ‘என் செயல்கள் உங்களுக்கு அப்படிதான் தோன்றும்’ என்று பொறுமையாக அவர் பதில் அளித்தார்.
இறுதியில் காந்தியின் உயிர் மீது தமக்கு அக்கறை இருப்பதால் கூட்டுத்தொகுதி முறைக்கு ஒப்புக்கொள்வதாக அறிவித்தார். 1932, செப்டம்பர் 24–ம் தேதி இந்திய வரலாற்றில் புகழ் பெற்ற ‘புனே ஒப்பந்தம்’ கையெழுத்தானது.
முழுக்கவும் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே போட்டியிடும் வகையில் இன்றைக்கும் இருக்கும் தனி தொகுதி முறைக்கு அந்த ஒப்பந்தம் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. நாடு விடுதலை அடைந்த பிறகு நேருவின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக அம்பேத்கர் பொறுப்பேற்றார்.
ஆயிரம் விமர்சனங்கள், கருத்து மோதல்கள் இருந்தாலும், அம்பேத்கரின் அறிவுத்திறன் மீது காந்திக்கும், நேருவுக்கும் இருந்த நம்பிக்கைக்குச் சான்றாக இந்த பதவி அமைந்தது. அமைச்சர் பதவியைவிட முக்கியமான அரசியல் சாசன வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கோபாலசாமி அய்யங்கார் போன்ற 4 பிராமணர்கள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவுக்குத் தாம் தலைவராக்கப்பட்டது குறித்து அம்பேத்கரே வியப்பு தெரிவித்தார்.
நேருவின் அமைச்சரவையில் அவர் சேர்ந்ததை கம்யூனிஸ்ட்கள் மானாவாரியாக விமர்சனம் செய்தார்கள். ‘காங்கிரசில் ஐக்கியமாகிவிட்ட பூஷ்வா அமைச்சர்’ என்று கிண்டலடித்தனர். அதற்கு, ‘எளிதில் தண்ணீரில் கரைந்தோடும் களிமண்ணைப் போல் நான் இருக்கவில்லை. நான் ஆறுகளைத் திசைதிருப்பிவிடும் உருகிவிடாத கற்பாறை போன்றவன். நான் எங்கிருந்தாலும், எப்படிப்பட்டவரின் நட்புக்கிடைத்தாலும் என்னுடைய தனித்தன்மையை எப்போதும் இழந்து விடமாட்டேன்’ என்று அம்பேத்கர் பதில் சொன்னார்.
அதன்படியே நடந்து, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தன்னுடைய சமூகத்தினர் மட்டுமல்லாது இந்த தேசத்தின் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்கு வாழ்வளிக்கும் வேலையைச் செய்தார். 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்கள் பாடுபட்டு இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கினார்.
7600 திருத்தங்கள் முன்மொழியப்பட்டு, அவற்றில் 2473 பரிசீலிக்கப்பட்டு, 1950 ஆண்டு ஜனவரி 26–ம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்து பெண்கள் உரிமை குறித்த சட்ட முன்வரைவு தொடர்பான கருத்து வேறுபாட்டால் 1951–ல் நேருவின் அமைச்சரவையில் இருந்து அம்பேத்கர் வெளியேறினார்.
அல்லும் பகலும் அரசியல் சட்ட வடிவமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நேரத்தில் சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் அம்பேத்கரை அலைக்கழிக்கத் தொடங்கின. சரியான தூக்கமின்மையால் முதுகு மற்றும் கால் மூட்டு களில் நரம்பு பிரச்சினையும் வலியும் அவரை வாட்டின.
இன்னொரு பக்கம் 1935–ல் அவரது மனைவி ரமாபாய் மறைந்துவிட்டதால் தனிமை அவரை வாட்டியது. கவனிக்க ஆளின்றி கலங்கிய அம்பேத்கருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சாரதா கபீர் அணுகுமுறை ஆறுதலாக இருந்தது. முற்போக்கான பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த சாரதாவுக்கு அம்பேத் கரின் ஆளுமைமீதும் அறிவுமீதும் மிகப்பெரிய மரியாதை இருந்தது.
தன்னுடைய முதல் மனைவி இறந்து 12 ஆண்டுகள் கழித்து, 56–வது வயதில் 1948–ல் டாக்டர் சாரதாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அப்போது சாரதாவுக்கு வயது 39. மணமானதற்குப் பிறகு ‘சவீதா அம்பேத்கர்’ என்றும் ‘மாய்’ எனவும் அவர் அழைக்கப்பட்டார்.
அம்பேத்கரின் இரண்டாவது திருமணம் அவரது இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனாலும் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்திருந்த அம்பேத்கரை அவர்களால் பெரிதாக கேள்வி கேட்க முடியவில்லை. ஆனாலும் முதுகுக்குப் பின்னால் முனங்கிக்கொண்டிருந்தனர். சதி வலையில் அம்பேத்கர் விழுந்து விட்டதாக சேறுவாரி இறைத்தனர்.
எந்த சாதி ஒழிப்புக்காக அம்பேத்கர் போராடினாரோ, அதே சாதியின் பெயரால் அவரைச் சேர்ந்தவர்கள் அவரது மனைவியை வெறுத்தனர். ஆனாலும் அம்பேத்கருக்குப் பக்கபலமாக அவரோடு இணைந்தே சவீதா செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
நாடு குடியரசான பிறகு முதல் பொதுத்தேர்தல் 1952–ம் ஆண்டு நடந்தது. 21 வயதை எட்டிய எல்லாருக்கும் வாக்குரிமை கொடுக்க வேண்டும் என்று வாதாடி, நேருவின் ஆதரவோடு அதை நிறைவேற்றிய அம்பேத்கர், நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டார்.
மும்பை வடக்கு தொகுதியில், தான் உருவாக்கிய பட்டியல் சாதி கூட்டமைப்பு சார்பில் மக்களவை உறுப்பினர் பதவிக்கு நின்றார். அம்பேத்கரைத் தோற்கடித்தே தீர வேண்டுமென காங்கிரஸ் கட்சி கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்தது. நேற்று வரை அமைச்சரவையில் சகாவாக இருந்து, அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கருக்கு எதிராக பிரதமர் நேரு மும்பைக்கு வந்து பரப்புரை செய்தார்.
கல்வியால் உயர்ந்து, ஜனநாயக அமைப்பின் வழியாக மக்களுக்கு அதிகாரம் கொடுத்த தலைவனுக்கு மக்கள் மறக்கமுடியாத பரிசைக் கொடுத்தனர். ஆமாம்... தேர்தலில் அம்பேத்கர் தோற்கடிக்கப்பட்டார். 14,374 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கஜ்ரோல்கர் எம்.பி ஆனார்.
அப்போதிருந்த தேர்தல் முறைப்படி இரட்டை வேட்பாளர் தொகுதி அது. அதில் பொதுத்தொகுதி வேட்பாளருக்கு போடப்பட்ட 50 ஆயிரம் வாக்குகள், ரிசர்வ் வேட்பாளரான அம்பேத்கருக்கு போடப்படவில்லை. அவரின் இத்தோல்விக்கு கம்யூனிஸ்ட் கட்சியும் பெரும்பங்காற்றியது. அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரான எஸ்.ஏ.டாங்கே அம்பேத்கரை வீழ்த்த வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்த்தார்.
ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும் சாதிப்பற்றே அம்பேத்கர் மீதான அவரது வெறுப்புக்கு காரணமாக இருந்தது. தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தாங்கள் மட்டுமே காவலர்கள் என்று சொல்லும் கம்யூனிஸ்ட்கள், அத்தகையவர்களின் உயர்வுக்காக சட்ட ரீதியான பாதுகாப்புகளை ஏற்படுத்தி தந்த அம்பேத்கரை காங்கிரசோடு சேர்ந்து கொண்டு தோற்கடித்து மகிழ்ந்தனர்.
அடுத்த ஆண்டில், மகாராஷ்டிராவில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த எம்.ஆர்.ஜெயகர் பதவி விலகியதை அடுத்து அந்த இடத்திற்குத் தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அல்லாத மற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்து அம்பேத்கரை மாநிலங்களவை எம்.பி. ஆக்கின. அந்த பதவி குறுகிய காலமே இருந்தது.
1954–ல் மகாராஷ்டிராவிலுள்ள பந்த்ரா நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. முந்தைய தேர்தலில் தோற்ற வடு அம்பேத்கரின் மனதை அழுத்தியதால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி ஆக வர நினைத்து மீண்டும் களமிறங்கினார். பொதுத்தொகுதியில் போட்டியிட்ட அசோக் மேத்தா காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற்றார். அவரோடு கூட்டணி அமைத்து நின்ற அம்பேத்கருக்கு இம்முறையும் மக்கள் தோல்வியையே மாலையாக போட்டனர்.
அரசியல் சாசனத்தின் சிற்பி 8,381 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனதைக் காங்கிரஸ் கட்சி கொண்டாடியது. காங்கிரசையும் காந்தியையும் எதிர்த்து அம்பேத்கர் போராடி வாங்கிய தனி தொகுதி முறையின் மூலம் ஒரு முறை கூட அவரால் நாடாளுமன்றத்திற்குச் செல்ல முடியாமலேயே போனது.
அம்பேத்கரின் கடைசி காலத்தில் நடந்தது என்ன? அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சர்ச்சைகள் உண்மையா?
(ரகசியங்கள் அடுத்த வாரமும் தொடரும்)
மனைவியின் நிறைவேறாத ஆசை!
அம்பேத்கரின் முதல் மனைவி ரமாபாய் கடவுள் பக்தி மிகுந்தவர். பந்தார்பூர் என்ற ஊரிலுள்ள கோவிலுக்குச் செல்ல வேண்டுமென்பது அவரது ஆசை. அம்பேத்கரிடம் அந்த ஆசையை தெரிவித்தார். அந்தக் கோவிலில் தாழ்த்தப்பட்டவருக்கு அனுமதி இல்லாததால் அங்கே போய் அவமானப்பட வேண்டாம் என்று அம்பேத்கர் நினைத்தார்.
‘கடவுள் சிலையை வணங்குவதை மறந்துவிடு. நம்முடைய ஒழுக்கமான வாழ்வின் மூலம் அடித்தட்டு மக்களுக்கு சுயநலமின்றி பணிபுரிவதன் வழியாக என்றாவது ஒரு நாள் நாம் வணங்கக்கூடிய கடவுளை நம்மிடத்திலேயே உருவாக்குவோம்’ என்று மனைவியை அமைதிப்படுத்தினார். கடைசி வரை தமது ஆசை நிறைவேறாமலேயே ரமாபாய் 1935 மே 27–ந் தேதி மறைந்து விட்டார்.
அம்பேத்கரும் சமஸ்கிருதமும்!
உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போது அம்பேத்கர் சமஸ்கிருதம் கற்க ஆசைப்பட்டார். ஆனால் உயர்வகுப்பினரைத் தவிர அந்த மொழியை வேறு யாரும் படிக்கக்கூடாது என்ற விதி இருந்ததால், பார்சி மொழியைப் படித்தார். பிற்காலத்தில் இதற்காகவே சமஸ்கிருதத்தைக் கற்ற அம்பேத்கர், அதிலுள்ள மந்திரங்களையும் அட்சர சுத்தமாக சொல்லப் பழகினார். சாஸ்திரங்களையும் படித்துவிட்டு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
காந்தி சொன்னது என்ன?
அம்பேத்கர் குறித்து காந்தி, தமது ‘ஹரிஜன்’ (11.2.33) இதழில், ‘‘டாக்டர் அம்பேத்கர் மிக உயர்ந்த தன்மைகளை உடைய குணநலன்களின் மகத்துவம் மிக்கவர். அவர் மிக அறிவுக்கூர்மையும், திறமையும், சட்ட நுணுக்கமும் அறிந்த ஓர் நியாயவாதி. அவரின் நுண்ணிய அறிவாற்றலால், ஏராளமானோர் உள்ளங்களில் இடம் பெறுகின்ற அளவுக்குப் பேசுவதில் திறமை வாய்ந்தவர். புத்திசாலிகளும் படித்தவர்களுமான ஆயிரக்கணக்கான சாதி இந்துக்களைக் காட்டிலும் அவர் அறிவில் சிறந்தவர். அரசாங்கத்தில் ஒரு வைதீக பிராமணர் வர முடியாத மிக உயர்ந்த பதவி எவ்விதம் இல்லையோ, அது போலவே அம்பேத்கர் வரமுடியாத உயர்ந்தபதவி எதுவும் இல்லை’’ என்று புகழ்ந்து எழுதினார்.

Related Tags :
Next Story