ஜனாதிபதி தேர்தலில், மதசார்பற்ற கட்சியுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போட்டியிட வாய்ப்பு


ஜனாதிபதி தேர்தலில், மதசார்பற்ற கட்சியுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போட்டியிட வாய்ப்பு
x
தினத்தந்தி 11 Jun 2017 4:00 AM IST (Updated: 11 Jun 2017 12:44 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி தேர்தலில், மதசார்பற்ற கட்சியுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போட்டியிட வாய்ப்பு ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

கம்பம்,

ஜனாதிபதி தேர்தலில், மதசார்பற்ற கட்சியுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போட்டியிட வாய்ப்புள்ளதாக அந்த கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மாடுகள் விற்க தடை

தேனி மாவட்டம் கம்பம்–குமுளி சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அ.தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்தபின்பு எந்த துறையிலும் தமிழக அரசின் செயல்திறன் குறிப்பிடும்படி இல்லை. குறிப்பாக ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக அ.தி.மு.க. 2, 3 அணிகளாக பிரிந்துள்ளன. இந்த அணிகள் கட்சி தலைமையை கைப்பற்றும் நோக்கத்திலேயே செயல்படுகின்றன. இதனால் மக்கள் பிரச்சினையை தீர்க்க அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. குறிப்பாக ‘நீட்’ தேர்வு, இந்தி திணிப்புக்கு அடுத்தபடியாக வளர்ச்சி திட்ட பணிகளுக்காக மாநில அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.17 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இதனை பெற மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

இது ஒருபுறம் இருக்க தற்போது இறைச்சிக்காக மாடுகளை விற்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவும் தமிழக அரசு தவறிவிட்டது. ஆனால் பக்கத்து மாநிலங்களான கேரளா, புதுச்சேரி, கர்நாடகாவை சேர்ந்த முதல்வர்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழக அரசு மத்திய அரசிடம் தனது எதிர்ப்பை பதிவு செய்யாமல் இருப்பது, மாநில அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்கிறதோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17–ந்தேதி நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் மதசார்பற்ற கட்சியுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை மலேசிய தூதரகம் அந்த நாட்டுக்குள் செல்ல அனுமதி மறுத்துள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஒரு கட்சியின் தலைவருமான அவருக்கு அனுமதி வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது ஆகும். மத்திய அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story