தாய்மொழி எதுவாக இருந்தாலும் ஆட்சி மொழியை அனைவரும் கற்க வேண்டும் முதல்–மந்திரி சித்தராமையா பேச்சு
தாய்மொழி எதுவாக இருந்தாலும் ஆட்சி மொழியை அனைவரும் கற்க வேண்டும் என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
தாய்மொழி எதுவாக இருந்தாலும் ஆட்சி மொழியை அனைவரும் கற்க வேண்டும் என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
திறப்பு விழாபெங்களூரு சிவாஜி நகரில் வி.கே.உபேதுல்லா அரசு மாதிரி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை அரசும், தனியார் நிறுவனமும் சேர்ந்து ரூ.16 கோடி செலவில் மேம்படுத்தி உள்ளது. 7–ம் வகுப்பு வரை மட்டும் இருந்த இந்த பள்ளியில் தற்போது பி.யூ. கல்லூரி வரை தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு, சுமார் 60–க்கும் அதிகமான வகுப்பறைகள் உள்ளன. ‘சீர்மிகு‘ வகுப்பறைகளும் உருவாக்கப்பட்டு உள்ளன. மின்னணு நூலகம், ஆய்வுக்கூடம், இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் மையம், சாப்பிடும் அறை ஆகியவை நவீன முறையில் உருவாக்கப்பட்டு உள்ளன. மேம்படுத்தப்பட்ட பள்ளியின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தொடக்க விழாவில், முதல்–மந்திரி சித்தராமையா, கல்வித்துறை மந்திரி தன்வீர் சேட், நகர வளர்ச்சித்துறை மந்திரி ரோஷன் பெய்க் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியை திறந்து வைத்து சித்தராமையா பேசியதாவது:–
ஆட்சி மொழியை கற்க வேண்டும்தாய்மொழி எதுவாக இருந்தாலும் ஆட்சி மொழியை அனைவரும் கற்க வேண்டும். எந்த மொழியை கற்பதற்கும் அரசு குறுக்கீடாக இருக்காது. ஆனால், ஆட்சி மொழி அனைவரும் கற்க வேண்டியது அவசியம். இந்த பள்ளியில் உருது வழி கல்வி போதிக்கப்படுகிறது. இங்கு, கன்னட வழி கல்வியையும் தொடங்க வேண்டும். பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த பள்ளியில் ஏற்படுத்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
1950–ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கல்வி பயின்று உள்ளனர். நகர வளர்ச்சித்துறை மந்திரி ரோஷன் பெய்க்கும் இங்கு தான் படித்துள்ளார். அவருக்கும், இந்த பள்ளிக்கும் உணர்வு பூர்வமான தொடர்பு உள்ளது.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
தரமான கல்வி வழங்க வேண்டும்விழாவில், கல்வித்துறை மந்திரி தன்வீர் சேட் பேசும்போது கூறியதாவது:–
அரசுடன் சேர்ந்து இந்த பள்ளியை தனியார் நிறுவனம் மேம்படுத்தியது போன்று கன்னட வழி கல்வி போதிக்கும் பள்ளிகளையும் மேம்படுத்த முன்வர வேண்டும். இந்த பள்ளியில் அனைத்து மதங்களை சேர்ந்த குழந்தைகளும் கல்வி பயில வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஏழை குழந்தைகளை சேர்க்க வேண்டும். மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும். இங்கு படிக்கும் குழந்தைகள் நல்ல வேலைக்கு செல்லும் வகையில் கல்வியை போதிக்க வேண்டும்.
இந்த பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் வீடுகளில் இருந்தபடியே பள்ளியில் நடைபெறும் நிகழ்வுகளை பெற்றோர் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அறிவாற்றல் என்பது யாருடைய சொத்தும் இல்லை. தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அப்போது அனைவரும் அறிவாளிகளாக மாறுவார்கள்.
இவ்வாறு மந்திரி தன்வீர் சேட் பேசினார்.
சேர்க்கை விண்ணப்பங்கள்இந்த அரசு மாதிரி தொடக்கப்பள்ளியில் கடந்த ஆண்டு 70 மாணவர்கள் மட்டுமே படித்தனர். நவீன வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு 7,090 சேர்க்கை விண்ணப்பங்கள் பள்ளிக்கு வந்துள்ளன. இருப்பினும், 1,500 பேருக்கு மட்டுமே இங்கு கல்வி பயில வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.