விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்படும் கூட்டுறவு துறை அமைச்சர் தகவல்
5 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்ட கூட்டுறவு துறை இணை பதிவாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கி கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:–
ரூ.40 ஆயிரம் கோடி கடன்கடந்த 6 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 58 லட்சத்து 57 ஆயிரத்து 408 விவசாயிகளுக்கு ரூ.27 ஆயிரத்து 442 கோடியே 22 லட்சம் அளவிற்கு பயிர்கடன்கள் வழங்கப்பட்டு உள்ளது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 4 டெல்டா மாவட்டங்களில் மட்டும் 31.5.2017 வரை ரூ.11 கோடியே 6 லட்சம் அளவிற்கு பயிர்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளில் ரூ.40 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு பயிர் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்கடன் பெறும் விவசாயிகளுக்கு ‘ரூபே’ கடன் அட்டை வழங்கும் திட்டம் தமிழக முதல் அமைச்சரால் வருகிற 12–ந்தேதி(நாளை) தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த அட்டையைக் கொண்டு தமிழக விவசாயிகள் இந்திய அளவில் எந்தவொரு ஏ.டி.எம். மையத்திலும் பணபரிவர்த்தனை மேற்கொள்ள இயலும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி, மாவட்ட கலெக்டர் ராஜாமணி, எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர், பரமேஸ்வரி முருகன், கூட்டுறவுசங்கங்களின் மாநிலமேலாண்மை இயக்குனர் அந்தோணிசாமிஜான்பீட்டர், ரவிச்சந்திரன் உள்ளிட்ட இணைபதிவாளர்கள், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டிமுன்னதாக திருச்சி அருகே உள்ள நாச்சி குறிச்சியில் அமைக்கப்பட்டு உள்ள வாழைத்தார் குளிரூட்டும் மற்றும் கனிய வைக்கும் நிலையத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:–
திருச்சி மாவட்டத்தில் காய்கறிகளை குளிரூட்டும் நவீன மையங்கள் இரண்டு உள்ளன. இந்த ஆண்டு 5 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் அனைத்து வகை காய்கறிகளும் பூஜ்ஜியம் டிகிரி வெப்பநிலையில் வைக்கப்பட்டிருக்கும். பண்ணை பசுமை காய்கறி கடைகளில் தேவையான அளவு தரமாக வழங்கப்படுகிறது. பண்ணை பசுமை காய்கறி திட்டத்தை நாடுமுழுவதும் வரவேற்று வருகின்றனர். காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்வதால் இடைத்தரகர்களுக்கு வாய்ப்பில்லை. விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. அதே போல் பொது மக்களுக்கும் காய்கறிகள் குறைந்த விலையில் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது பற்றி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து தவறான தகவல்களை பதிவு செய்து வருகிறார். மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா விரும்பிய இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக தொடங்க மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.