தமிழகத்தில் திறமையான தலைமை இல்லை
தமிழகத்தில் திறமையான தலைமை இல்லை ரூபாகங்குலி எம்.பி. திருப்பூரில் பேட்டி
திருப்பூர்,
திருப்பூரில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் கலந்து கொண்ட ரூபா கங்குலி எம்.பி., தமிழகத்தில் திறமையான தலைமை இல்லை என்று பேட்டியளித்தார்.
கருத்தரங்குபிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் விழா என்ற பெயரில் மத்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பாரதீய ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் அனைவரும் இணைவோம்! அனைவரும் உயர்வோம் உயர்வோம் என்ற தலைப்பில் கருத்தரங்கு வாலிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கருத்தரங்கிற்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். கோட்ட இணை பொறுப்பாளர் பாயிண்ட் மணி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீனிவாசன், மாவட்ட பொது செயலாளர்கள் கதிர்வேல், செந்தில் சண்முகம், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் மேற்குவங்கத்தை சேர்ந்த பாரதீய ஜனதா எம்.பி. ரூபா கங்குலி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
திறமையான தலைமை இல்லைமத்தியில் பாரதீய ஜனதா அரசு மக்களில் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஏழைகளுக்கான பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி மக்களுக்கான மானியங்களை அவர்களுக்கே நேரடியாக கிடைக்க வழிவகை செய்துள்ளது. இதனால் முறைகேடுகள் தடுக்கப்பட்டு அரசுக்கு பணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. தொழில் துறையில் வளர்ச்சி பெற்ற நகரமாக திருப்பூர் இருந்து வருகிறது. இருப்பினும் நீர் ஆதாரம் உள்ளிட்டவை இங்கு அதிகளவில் மாசடைந்து உள்ளன. இது போன்ற பாதிப்புகளில் இருந்து நாட்டை மீட்க தூய்மை இந்தியா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முதலில் சற்று சிரமமானதாக இருக்கும். ஆனால் இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள். வரி விகிதங்களை சரியாக அரசுக்கு செலுத்தினால் மட்டுமே அரசுக்கு தேவையான வருவாய் வருவதுடன், நலத்திட்டங்களையும் நிறைவேற்ற முடியும். தமிழகத்தை பொறுத்தவரை தற்போது திறமையான தலைமை இல்லை. இது அரசுக்கும், ஆளுங்கட்சிக்கும் உகந்ததாக இல்லை. இந்த சூழல் எதிர்க்கட்சிகளுக்கு உகந்த தருணமாக அமைந்து விடும். தமிழக அரசியலை பொறுத்தவரை அரசியல்வாதிகளில் யார்? எப்போது? சிறைக்கு செல்கிறார்கள், அவர்கள் எப்போது சிறையில் இருந்து வெளியில் வருகிறார்கள் என்றே தெரியவில்லை. மாநில அரசு மத்திய அரசுடன் மோதல் போக்குடன் நடக்க கூடாது. அப்போதுதான் மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.