ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்த போது மேளதாளத்துடன் ஆட்டம் போட்ட பா.ஜனதா பெண் எம்.பி


ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்த போது மேளதாளத்துடன் ஆட்டம் போட்ட பா.ஜனதா பெண் எம்.பி
x
தினத்தந்தி 11 Jun 2017 4:30 AM IST (Updated: 11 Jun 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்தபோது மேளதாளத்துடன் ஆட்டம் போட்ட பா.ஜனதா பெண் எம்.பி. தொண்டர்கள் உற்சாகம்

திருப்பூர்,

தாராபுரம் அருகே ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்தபோது மேளதாளத்துக்கு ஏற்ப பா.ஜனதா பெண் எம்.பி. ஆடினார். இதைப்பார்த்து தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

ரூபா கங்குலி எம்.பி.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ரூபா கங்குலி. இவர் பா.ஜனதா எம்.பி. ஆவார். இவர் நேற்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து கார் மூலமாக மூலனூர் வந்தார். அவருக்கு மூலக்கடையில் பா.ஜனதாவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அதன்பிறகு அருகே உள்ள வலையக்காரன் வலசுவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பிறகு கோவில் பூசாரி, ரூபா கங்குலி எம்.பி.க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேளத்துக்கு ஏற்ப ஆடினார்

இதைத்தொடர்ந்து சாமி தரிசனம் முடித்த ரூபா கங்குலி எம்.பி. கோவிலுக்கு வெளியே வந்தபோது அங்கு மேளதாளம் முழங்க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். கழுத்தில் மாலையுடன் வந்த ரூபா கங்குலி எம்.பி. முதலில் மேளதாளத்துக்கு ஏற்ப தலையை அசைத்தபடி ஆடத்தொடங்கினார். இதைப்பார்த்த தொண்டர்கள் உற்சாக மிகுதியில் விசில் அடித்தும், கைத்தட்டியும் ஆரவாரம் செய்தார்கள்.

மேளமும் விரைந்து அடிக்க, ஒரு கட்டத்தில் சாமி அருள் வந்தவர் போல் ரூபா கங்குலி எம்.பி. கைகளை மேலே தூக்கி ஆடினார். கோவில் பூசாரியும் ஒரு பக்கத்தில் நின்று ஆட, பெண்கள் சுற்றியிருந்து உற்சாகப்படுத்த ரூபா கங்குலி எம்.பி. ஆடி முடித்தார். பின்னர் இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி சாமியை வணங்கி விட்டு அங்கிருந்து தாராபுரம் புறப்பட்டார். ரூபா கங்குலி எம்.பி. தொண்டர்கள் மத்தியில் ஆடிய சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

மகாபாரதம் தொடர்

பின்னர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடந்த தூய்மைப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் குண்டடத்தில் உள்ள ஏழை தொண்டர் வீட்டுக்கு ரூபா கங்குலி எம்.பி. சென்று அங்கு தரையில் அமர்ந்து அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார். பின்னர் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

ரூபா கங்குலி எம்.பி. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் திரவுபதியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story