நல்லாற்றில் சாயக்கழிவுநீர் கலந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை


நல்லாற்றில் சாயக்கழிவுநீர் கலந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 11 Jun 2017 3:15 AM IST (Updated: 11 Jun 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள நல்லாற்றில் சாயக்கழிவுநீர் கலந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை

திருப்பூர்,

திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள நல்லாற்றில் சாயக்கழிவு நீர் கலந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

நல்லாற்றில் சாயக்கழிவுநீர் கலப்பு

திருப்பூரில் நொய்யல் மற்றும் அதன் கிளை ஆறான நல்லாறு முக்கிய நீர் ஆதாரங்களாக இருந்து வருகின்றன. இந்த இரு ஆறுகளின் கரைகளிலும் ஏராளமான சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவுகள் பெரிய குழாய்கள் மூலமாக பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் அவ்வாறு சாயக்கழிவு நீர் செல்லும் குழாய்கள் அடிக்கடி திறக்கப்பட்டு சாயக்கழிவுநீர் ஆறுகளில் விடப்படுவதாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் திருப்பூர் அங்கேரிபாளையம் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் தனியார் சாய ஆலைகளில் இருந்து பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாயில் திறப்பு ஏற்பட்டு சாயக்கழிவுநீர் நல்லாற்றில் கலந்தது. பல மணி நேரம் சாயக்கழிவு நீர் ஆற்றில் கலந்த பின்னர் சம்பந்தப்பட்ட சாயப்பட்டறை பணியாளர்கள் ராட்சத எந்திரங்களுடன் சென்று குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட முயன்றனர்.

முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள்

ஆனால் பெருமளவு சாயக்கழிவு நீர் கலக்கும்வரை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு, நீண்ட நேரத்திற்கு பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் சரிசெய்ய முயன்றதை பார்த்த அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, குழாய் திறப்பு என்பது வேண்டும் என்றே செய்யப்படுவதாகவும், செலவினங்களை குறைக்க சாயக்கழிவுநீர் ஆற்றில் கலந்து விடப்படுகிறது என்றும், இதை நிரந்தரமாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த உடைப்பு அடைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story