ஜல்லிக்கட்டு: அடங்காமல் திமிறிய காளைகள்; அடக்கி காட்டிய காளையர்கள்


ஜல்லிக்கட்டு: அடங்காமல் திமிறிய காளைகள்; அடக்கி காட்டிய காளையர்கள்
x
தினத்தந்தி 11 Jun 2017 4:15 AM IST (Updated: 11 Jun 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் அடங்காமல் காளைகள் திமிறின. வீறுகொண்ட காளையர்கள் அந்த காளைகளை அடக்கி காட்டினர்.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மத்ருட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வேம்பாக்கவுண்டன்புதூரில் ஜல்லிக்கட்டு நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்பாக நின்று ஜல்லிக்கட்டு போட்டியை காண மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

காளைகளை அடக்குவதற்கான எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு அந்த இடத்தில் தோரண கயிறு கட்டியிருந்தனர். ஜல்லிக்கட்டின் தொடக்கமாக, பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து நடந்த ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.

436 காளைகள்

காலை 9 மணியளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் வரை நடந்தது. முதலில் மாரியம்மன் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வதற்காக நாமக்கல், திருச்சி, துறையூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கெங்கவல்லி, தம்மம்பட்டி, உரம்பு, ஆயில்பட்டி, முள்ளுக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 436 காளைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் மொத்தம் 372 காளைகள் மட்டும் களமிறக்கப்பட்டன. நேரம் குறைவால் மற்ற காளைகள் களமிறக்கப்படவில்லை.

வாடி வாசல் வழியாக சீறிப்பாய்ந்தபடி வெளியே வந்த காளைகளை சீருடையுடன் வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மடக்கி பிடித்து அடக்க முற்பட்டனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்ற சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் ஒடின. இதில் சிதம்பரம், சடையன் உள்பட 4 வீரர்கள் காயம் அடைந்தனர். இவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்க காசு, மிதிவண்டி, கட்டில், வெள்ளி பொருட்கள், சில்வர் பாத்திரங்கள், குத்துவிளக்கு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதே போல் வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை காண சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வேம்பாக் கவுண்டன்புதூரில் திரண்டு வந்து கண்டுகளித்தனர்.


Related Tags :
Next Story