சேலம் அரசு ஆஸ்பத்திரி அருகே 5 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய தாயால் பரபரப்பு


சேலம் அரசு ஆஸ்பத்திரி அருகே 5 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய தாயால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Jun 2017 4:30 AM IST (Updated: 11 Jun 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு ஆஸ்பத்திரி அருகே 5 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய தாயால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

சேலம்,

சேலம் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள பெரியார் மேம்பாலத்தின் கீழ் நேற்று காலை 11 மணிக்கு பர்தா அணிந்த நிலையில் ஒரு பெண், தனது 2 பெண் குழந்தைகளை அழைத்து கொண்டு வந்தார். ஒரு சிறுமிக்கு 3 வயதும், இன்னொரு சிறுமிக்கு 5 வயதும் இருக்கும். அந்த வேளையில் திடீரென்று 5 வயது சிறுமியை, தாயார் கொடூரமாக தாக்க தொடங்கினார்.

தரையில் கிடந்த கல்லை எடுத்து குழந்தையின் வாயிலும், தலைமுடியை பிடித்தபடி அங்கிருந்த சுவற்றில் முட்டியும் தாக்கினார். இந்த தாக்குதலில் நிலைகுலைந்துபோன சிறுமிக்கு வாயில் இருந்து ரத்தம் கொட்டியது. இந்த இரக்கமற்ற செயலை ரோட்டில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஓடோடி வந்து, தாயின் மூர்க்கத்தனமான தாக்குதலை தடுத்து நிறுத்தினர். மேலும் சிறுமிக்கு குடிக்க பாட்டில் தண்ணீர் கொடுத்து தேற்றினர். மேலும் உடனடியாக அவர்கள் செவ்வாய்பேட்டை போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை


செவ்வாய்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரிக்கையில், அந்த பெண் பேச மறுத்து விட்டார். மேலும் அந்த பெண் முகத்தை மறைத்து பர்தா அணிந்திருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த வேளையில் அங்கு வந்த முஸ்லிம் ஒருவர், உருது மொழியில் பேசி அந்த பெண்ணிடம் விவரம் கேட்டார்.

அப்போது அந்த பெண் சென்னையை சேர்ந்தவர் என்றும், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் உறவினரை தனது 2 குழந்தைகளுடன் பார்க்க வந்ததும் தெரியவந்தது. ஆஸ்பத்திரியை விட்டு வெளியே மூவரும் வரும்போது, மூத்த குழந்தை தாயார் அணிந்திருந்த பர்தாவை மிதித்து விட்டதால், அவர் இடறி கீழே விழுந்து விட்டதும், அதனால் ஆத்திரத்தில் தாக்கியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அப்பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

பெற்ற குழந்தையை, தாய் ஒருவர் நடுரோட்டில் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story