ரூ.18 லட்சம் லஞ்சமாக கொடுத்தது எப்படி? பெண்ணிடம் வருமான வரித்துறையினர் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மகனை மருத்துவக்கல்லூரியில் சேர்க்க ரூ.18 லட்சம் லஞ்சமாக கொடுத்தது எப்படி? என்பது குறித்து பெண்ணிடம் வருமான வரித்துறையினர் விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை மாதவரம் பால்பண்ணை வேணுகோபால்நகரைச் சேர்ந்தவர் செல்வி. இவரது மகனுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி சென்னை கோவர்த்தனகிரி லட்சுமிநகரைச் சேர்ந்த அனுபாக்யா(வயது 31) உள்பட 3 பேர் செல்வியிடம் ரூ.18 லட்சம் பெற்றுள்ளனர்.
ஆனால், மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று அனுபாக்யா, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:–
மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேவேளையில் புகார்தாரரான செல்விக்கு 18 லட்சம் ரூபாய் பணம் வந்தது எப்படி என்பதையும் விசாரிக்க வேண்டியது உள்ளது. லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றமாகும்.
லஞ்சம் வாங்குபவர்கள் மட்டும் தண்டிக்கப்படக்
கூடாது. லஞ்சம் கொடுப்பவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இதன்மூலம் லஞ்சம் கொடுப்பதை தடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே, புகார்தாரரான செல்விக்கு 18 லட்சம் ரூபாய் பணம் எப்படி வந்தது என்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும்.
விசாரித்து நடவடிக்கை
அதேவேளையில் வருமான வரித்துறை ஆணையரும் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக இந்த உத்தரவு நகலை வருமான வரித்துறைக்கு ஐகோர்ட்டு பதிவாளர் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story