சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடித்தபோது விபத்து; ஒருவர் பலி


சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடித்தபோது விபத்து; ஒருவர் பலி
x
தினத்தந்தி 11 Jun 2017 3:34 AM IST (Updated: 11 Jun 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சில்க்ஸ் கட்டிட இடிப்பின்போது ‘ஜா கட்டர்’ எந்திரம் சரிந்து விழுந்து டிரைவர் பலியானார்.

சென்னை, 

சென்னை தியாகராயநகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த 31–ந்தேதி அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ வேகமாக பரவியதால் அடுத்தடுத்து 60 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. 400–க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களை கொண்டு 3 நாட்கள் தீயை அணைக்கும் பணி நடந்தது.

எனினும் மீண்டும் மீண்டும் அந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீயை அணைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டது. எனினும், ஒரு வழியாக தீ அணைக்கப்பட்டது. இதற்கிடையே கட்டிடத்தின் 4 மாடிகளும், முகப்பு பகுதிகளும் இடிந்து விழுந்தன.

எந்திரம் விழுந்தது

இதனால் கட்டிடத்தின் உறுதி தன்மை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும் தானாக விழுந்தால் பலத்த சேதம் ஏற்படலாம் என்பதால் கட்டிடத்தை இடிக்க தமிழக அரசு முடிவு செய்தது. உடனே ‘ஜா கட்டர்’ என்ற நவீன எந்திரங்களை கொண்டு இந்த கட்டிடத்தை இடிக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்த பணிகள் 3 நாட்களுக்குள் முடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறிய நிலையில் எந்திரங்கள் பழமையானது என்பதாலும், அடிக்கடி பழுதாவதாலும் இடிக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜா கட்டர் எந்திரம் கட்டிடத்தை இடிக்கும் பணியின்போது கட்டிடம் சரிந்து எந்திரம் மீது விழுந்து எந்திரம் பழுதானது. இதையடுத்து அந்த எந்திரம் சரிசெய்யப்பட்டு வழக்கம்போல் நேற்று பணிகள் நடந்து வந்தது. 

இந்த நிலையில் நேற்று மாலை இடிபாடுகள் மீது நின்று கட்டிடத்தை இடித்து கொண்டிருந்த ஜா கட்டர் எந்திரம் ஒன்று அதிர்வு காரணமாக சரிந்து கீழே விழுந்தது.

டிரைவர் பலி

இதில் அந்த எந்திரத்தை இயக்கி கொண்டிருந்த டிரைவர் சிக்கி கொண்டார். இதை பார்த்த அருகில் இருந்த எழும்பூர் தீயணைப்பு நிலைய அதிகாரி விஜயகுமார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஜா கட்டர் எந்திரத்தில் சிக்கிய டிரைவரை மீட்டார். எனினும் அவர் படுகாயம் அடைந்ததால் ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே டிரைவர் பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும், இந்த விபத்தில் சிக்கி தொழிலாளி கோவிந்தன் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து கட்டிடம் இடிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, உயிரிழந்த டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் உள்ள கெட்டிக்காரன்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் சரத்குமார்(வயது 22) என்பது தெரியவந்தது. 

விடுமுறை கிடைக்கவில்லை

உயிரிழந்த சரத்குமார் பற்றி நெஞ்சை உருக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது உயிரிழந்த சரத்குமார் நேற்று முன்தினமே தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக பஸ்சில் முன்பதிவு செய்து டிக்கெட் எடுத்து உள்ளார். ஆனால், மாற்று டிரைவர் யாரும் இல்லாத காரணத்தால் அவருக்கு விடுமுறை கிடைக்கவில்லை. 

இதனால் அவர் ஊருக்கு செல்லாமல் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டதாகவும், விருப்பமில்லாமல்தான் நேற்று சரத்குமார் பணியை செய்ததாகவும் உடன் வேலை பார்த்த சக தொழிலாளி ஒருவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

ரூ.5 லட்சம் நிவாரணம்

உறுதி தன்மையை இழந்த கட்டிடத்தை இடிக்கும் போது முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததும், அதை எவ்வாறு இடிப்பது என்று ஆராயததுமே ஜா கட்டர் டிரைவர் உயிரிழப்புக்கு காரணம் என்று சுற்று வட்டார வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கூறினர்.

இந்த விபத்து குறித்து சென்னை சில்க்ஸ் பொதுமேலாளர் ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘ஏற்கனவே சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் எங்கள் குடும்பம் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. தற்போது கட்டிடத்தை இடிக்கும் பணியின்போது தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் எங்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. ஆகவே உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காண்டிராக்டர் மூலமாக ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்’’ என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story