பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாவிட்டால் மராட்டிய கூட்டணி அரசில் இருந்து வெளியேறுவோம் பா.ஜனதாவுக்கு சிவசேனா எச்சரிக்கை
மராட்டியத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாவிட்டால் எந்த நேரத்திலும் கூட்டணி அரசில் இருந்து வெளியேறுவோம் என்று பா.ஜனதாவுக்கு சிவசேனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாவிட்டால் எந்த நேரத்திலும் கூட்டணி அரசில் இருந்து வெளியேறுவோம் என்று பா.ஜனதாவுக்கு சிவசேனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
பயிர்க்கடன் பிரச்சினைமராட்டியத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 1–ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
ஆனால் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனா வலியுறுத்தி உள்ளது. இதற்கு முன்வராவிட்டால் இடைத் தேர்தலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று அக்கட்சி பா.ஜனதாவுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
சஞ்சய் ராவுத் பேட்டிஇதுகுறித்து சிவசேனா மூத்த தலைவரும், டெல்லி மேல்–சபை எம்.பி.யுமான சஞ்சய் ராவுத் ‘மராத்தி’ செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி வருமாறு:–
மராட்டியத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இது தான் எங்களது நிலைப்பாடு. மாநில சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை தவிர்க்க வேண்டும் என்றால், பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள். நாங்கள் பதவியை துறக்க தயாராக இருக்கிறோம். அதிகாரத்தை துறப்பதால் எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் வராது. சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வந்தால், பா.ஜனதாவை விட நாங்கள் மிகச்சிறந்த முறையில் எங்களை தயார்படுத்தி வைத்து இருக்கிறோம். தேவைப்படும் நிலையில் எந்த நேரத்திலும் நாங்கள் அரசில் இருந்து வெளியேறுவோம்.
முழுமையாக பயிர்க்கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் அரசின் குரல்வளையை நெரிக்க நாங்கள் அதிக நேரம் எடுத்து கொள்ள மாட்டோம். இதை எங்களது எச்சரிக்கையாக எடுத்து கொள்ளுங்கள். பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அழுக்கு அரசியலில் ஈடுபடுகிறார். விவசாய சங்கங்கள் இடையே பிளவை ஏற்படுத்தி வருகிறார்.
இவ்வாறு சஞ்சய் ராவுத் கூறினார்.
முன்னதாக நாசிக்கில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் ரஞ்சய் ராவுத் பேசியதாவது:–
ஜூலையில் அரசியல் பூகம்பம்மாநிலத்தில் கடந்த 3 வருடத்தில் 4 ஆயிரத்து 500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அப்படி இருந்தும் அரசு பயிர்க்கடனை தள்ளுபடி செய்யாமல் இழுத்து அடித்து வருகிறது. இந்த அரசு தேவையா?. ஜூலையில் (அடுத்த மாதம்) சிவசேனா சார்பில் மிகப்பெரிய பூகம்பம் அரசியலில் நிகழ்த்தப்பட உள்ளது. விவசாயிகளின் கடன் தள்ளுபடியில் இனிமேல் சிவசேனா பா.ஜனதாவுடன் எந்த அளவு மோத உள்ளது என்பதை அனைவரும் பார்ப்பார்கள்.
அப்போது சிவசேனா சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் பயிர்க்கடன் பிரச்சினைக்காக நடைபெறும். நமது கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறும்.
சிவசேனாவை ஒழிக்க முடியாதுசிவசேனாவை ஒழிக்க பா.ஜனதா பல வழியில் முயற்சி செய்து வருகின்றது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது.
பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து உயர்மட்ட அளவிலான மந்திரிகள் குழுவை முதல்–மந்திரி அமைத்து உள்ளார். அதில் நமது கட்சியை சேர்ந்த மந்திரி திவாகர் ராவ்தேயும் உள்ளார். இந்த குழு கூட்டத்தில் விவசாயிகளுக்கான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் திவாகர் ராவ்தே வலியுறுத்துவார்.
இவ்வாறு சஞ்சய் ராவுத் கூறினார்.