திருத்தணி அருகே கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து


திருத்தணி அருகே கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 11 Jun 2017 3:56 AM IST (Updated: 11 Jun 2017 3:56 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அருகே கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருத்தணி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). அவர் கும்மிடிப்பூண்டியில் இருந்து லாரியில் 300–க்கும் மேற்பட்ட கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வேலூர் மாவட்டம் மேல் விஷாரத்திற்கு நேற்று காலை சென்றார்.

அந்த லாரி திருத்தணியை அடுத்த நெடும்பரம் என்ற இடத்தில் செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த தரைப்பால சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் அந்த லாரியில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் கீழே விழுந்து சிதறின. மேலும் லாரி என்ஜினில் இருந்து திடீரென புகை ஏற்பட்டது.

டிரைவர் படுகாயம்

இந்த விபத்தில் டிரைவர் சுப்பிரமணி படுகாயம் அடைந்தார். இந்த விபத்தை நேரில் பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக திருத்தணி தீயணைப்பு துறையினருக்கும், கனகம்மாசத்திரம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தீயணைப்பு துறை அலுவலர் பாஸ்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் உடனே அங்கு சென்று டிரைவர் சுப்பிரமணியத்தை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தீயணைப்பு வீரர்கள் உடனடியாக லாரி என்ஜினில் தண்ணீரை பீய்ச்சி அடித்து புகையை கட்டுப்படுத்தினர். அங்கு சிதறி கிடந்த கியாஸ் சிலிண்டர்களை அப்புறப்படுத்தினார்கள். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story