தேவைப்படும் போது மட்டும் தேடிப்போகாதீர்கள்


தேவைப்படும் போது மட்டும் தேடிப்போகாதீர்கள்
x
தினத்தந்தி 11 Jun 2017 3:26 PM IST (Updated: 11 Jun 2017 3:26 PM IST)
t-max-icont-min-icon

குடும்ப உறவுகளுக்கிடையேயான பந்தம் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை பொழிவதாக அமைய வேண்டும்.

குடும்ப உறவுகளுக்கிடையேயான பந்தம் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை பொழிவதாக அமைய வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தன வாழ்க்கை உறவுகளுடனான நெருக்கத்தை குறைத்து கொண்டிருக்கிறது. பெரும்பாலானோர் ஒருவருக்கொருவர் நலம் விசாரிக்க முடியாத அளவுக்கு கால சுழற்சியில் சிக்கி இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டிற்குள் இருக்கும் குடும்ப உறவினர் களுக்கிடையே பேசும் நேரத்தையே வரையறை செய்யும் நிலையில் இருப்பவர்கள் உறவுகளை உதாசீனப்படுத்தும் நிர்பந்தத்திற்கும் ஆளாகிறார்கள். தங்களுக்கு அவசிய தேவை ஏற்படும்போது மட்டும் உறவுகளை நாடுவது உண்மையான உறவாக நீடிக்காது. அன்பால் பிணைக்கப்பட்டதாக உறவு சங்கிலி வலுப்பெற வேண்டும்.

தேவைக்காக நாடுவதோ, செய்த உதவிக்கு ஈடாக எதிர்பார்ப்பதோ நிரந்தர உறவை தக்க வைக்க துணை நிற்காது. திடீரென்று உறவை வலுப்படுத்த முயற்சிக்கும்போதே உங்களது உள் நோக்கம் மற்றவர்களுக்கு புரிய தொடங்கி விடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தாங்கள் எதிர்பார்ப்பதை உறவுகளிடம் இருந்து பெற முடியாத நிலை ஏற்படலாம்.

உறவுகளை ஒதுக்க நினைப்பது ஒருபோதும் சரியல்ல. அது இழப்பைத்தான் ஏற்படுத்தும். உறவுகளிடம் இருந்து தேவையானதை பெற்றுக்கொள்ள முதலில் உறவுடன் சுமுக தொடர்பு நீடிக்க வேண்டும். தேவைக்கு மட்டும் தொடர்பு கொள்ளாமல் அடிக்கடி நலம் விசாரிப்புகளை தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும்போது ஆறுதல் கூறுவதோடு கைகோர்த்து உதவ வேண்டும்.

ஆறுதல் கூற எத்தனைபேர் இருக்கிறார்கள் என்பதை விட எத்தனை பேர் உதவிக்கரம் நீட்டுகிறார்கள் என்பதில்தான் உறவின் ஸ்திரத்தன்மை நிலைநாட்டப்படுகிறது. கஷ்ட நேரத்தில் உதவிபுரிபவர்களிடம் எல்லோருமே நிச்சயம் விசுவாசமாகவும், அன்பாகவும் இருப்பார்கள். புதிய உறவுகளுக்கான தேடலில் பழைய உறவுகளை உதாசீனப்படுத்தி விடக்கூடாது. உறவுகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்கள் சொல்லும் விஷயங்கள் நல்லதோ, கெட்டதோ காது கொடுத்து கேளுங்கள். சிக்கலான சூழ்நிலையை அவர்கள் எதிர்கொள்ளும் வேளையில் மன பாரத்தை இறக்கி வைக்கும் அளவுக்கு நல்ல துணையாக செயல்படுங்கள்.


Next Story