உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 11 Jun 2017 4:57 PM IST (Updated: 11 Jun 2017 4:57 PM IST)
t-max-icont-min-icon

அந்த பெண்மணிக்கு வயது 45-ஐ கடந்துவிட்டது. ஆனால் மிக நுட்பமாக ‘மேக்கப்’போட்டு, முப்பது வயதுக்கு மேல் மதிக்கப்படாத அளவுக்கு பார்த்துக்கொள்வார்.

அந்த பெண்மணிக்கு வயது 45-ஐ கடந்துவிட்டது. ஆனால் மிக நுட்பமாக ‘மேக்கப்’போட்டு, முப்பது வயதுக்கு மேல் மதிக்கப்படாத அளவுக்கு பார்த்துக் கொள்வார். அவர் பிரபலமானவர் என்பதால் தனது மேக்கப், ஆடை அலங்காரத்துக்கே தனி குழுவை வைத்திருக்கிறார். அவரது கணவர் கலைத்துறையில் பலருக்கும் தெரிந்தவர். அவர்களுக்கு ஒரே ஒரு மகன்.

அழகு, ஆரோக்கியம், நல்ல பொழுதுபோக்கு, ஆறு மாதத்திற்கு ஒரு வெளிநாட்டு சுற்றுலா என்றெல்லாம் இருந்தாலும் அந்த பெண்மணிக்கு ஏதோ ஒரு நிறைவின்மை. ‘கவலையும், திருப்தியின்மையும் தன்னை அவ்வப்போது வாட்டுவதாகவும், காரணம் என்னவென்று தெரியவில்லை’ என்றும் தனது நெருங்கிய தோழி ஒருவரிடம் கூறினார்.

அந்த தோழி மதவாதிகள் என்ற போர்வையில் இருக்கும் ஒருசிலரை அவ்வப்போது சந்தித்து கலந்துரையாடுவதில் மகிழ்கிறவள். யாருக்கு என்ன பிரச்சினை என்றாலும், அனைத்துக்கும் அந்த ‘மனிதர்கள்’ மூலம் தீர்வுகிடைக்கும் என்று நம்பவைப்பவள். அதற்கு ஆதாரமாக சில பெண்களின் செல்நம்பரை எப்போதும் கையில் வைத்திருப்பாள். பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் பெண்களை, அந்த செல்நம்பர் பெண்களிடம் பேசவைப்பாள். அந்த பெண்கள் மேற்படி மனிதர்கள் மூலம் அது நடந்தது.. இது நடந்தது என்று கதைவிட்டு, அந்த மனிதர்கள் மீது நம்பிக்கை வரும்படி செய்துவிடுவார்கள்.

அந்த பிரபல பெண்மணி, தனக்கு வாழ்க்கையில் திருப்தியில்லாமை ஏற்பட்டிருப்பதற்கான காரணத்தை தனது தோழியிடம் சொல்ல, அவள் குறிப்பிட்டதொரு மதவாதியிடம் அவரை அழைத்துச்சென்றாள்.

அந்த மனிதர் நாலைந்து முறை அவரை தனது இருப்பிடத்திற்கு வரவழைத்தார். அங்கு அவரை சந்திக்க எப்போதும் ஒரு ‘செட்டப்’ கூட்டம் இருந்துகொண்டிருக்கும். முதலில் அந்த பெண்மணியை கடைசி வரிசையில் உட்கார வைத்தார்கள். பின்பு நடுவரிசை.. அடுத்து சற்று அருகில் உட்காரவைத்தார்கள். அடுத்த முறை வரும்போது, ‘அவரை சந்திக்கலாம் என்றும் பிரச்சினைகளை கூறி தீர்வு பெறலாம்’ என்று அறிவுறுத்தி அனுப்பிவைத்தார்கள்.

மறுமுறை அந்த பெண்மணி ஆவலோடு அவரை சந்திக்க சென்றார். தனியறையில் ஆடம்பரமாக உட்கார்ந்திருந்தவர், அந்த பெண்மணியிடம் மணிக்கணக்கில் பேசினார். நினைவு தெரிந்த நாளில் இருந்து, முந்தைய நாள் நடந்ததுவரை அனைத்தையும் அந்த பெண்மணியிடமிருந்து கேட்டறிந்தார்.

பின்பு, அந்த பெண்மணியின் மனதுக்குப் பிடித்த பத்து ஆண்களின் பெயரை எழுதும்படி சொன்னார். இவரும் எழுதிக்கொடுத்தார். அதை பல்வேறு கோணங்களில் திருப்பித் திருப்பி பார்த்த அவர், அதில் ஒரு ஆணின் பெயரைக்கூறி, ‘அவர்தான் உங்கள் திருப்தியின்மைக்கு காரணம்’ என்றார்.

அந்த பெண்மணி சற்றே அதிர்ந்து, ‘அவர் எனக்கு வெறும் நண்பர்தான். ஜிம்முக்கு நான் செல்லும்போது அவரும் வருவார். நட்போடு பேசிக்கொள்வோம் அவ்வளவுதான். அதற்குமேல் எங்களுக்குள் எந்த பழக்கமும் இல்லை’ என்றார்.

அந்த நபர் உடனே, ‘கடந்த ஜென்மத்தில் நீங்கள் ஆணாகவும், அவர் பெண்ணாகவும் இருந்திருக்கிறார். நீங்கள் இருவரும் காதலித்திருக்கிறீர்கள். உங்கள் பெற்றோர் சதிசெய்து உங்களை பிரித்திருக்கிறார்கள். ஏக்கத்தோடு உங்கள் ஜென்மம் முடிந்திருக் கிறது. இப்போதும் அந்த ஏக்கம் நீடித்துக்கொண்டிருக்கிறது. அதனால் நீங்கள் அந்த நபரை பார்த்ததும் அந்த ஏக்கம் தூண்டப்பட்டு அப்போதிருந்து உங்களுக்குள் இனம்புரியாத கவலையும், திருப்தியின்மையும் தோன்றியிருக்கிறது. நீங்கள் இருவரும் கலந்தால்தான் உங்கள் மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும்’ என்று கூறியுள்ளார்.

இந்த ‘மிகப்பெரிய கண்டுபிடிப்பிற்காக’ அந்த பிரபல பெண்மணியிடம் இருந்து பெருந்தொகையையும் வாங்கிவிட்டார். அதில் குறிப்பிட்டதொகை கமிஷனாக அந்த பெண்மணியின் தோழிக்கு போய் சேர்ந்திருக்கிறது.

கடந்த ஜென்மத்தில் தொடர்பில் இருந்ததாக கூறிய அந்த ஜிம் நண்பருக்கு திரு மணமாகி, குழந்தைகளும் இருக்கின்றன. சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாக, என்ன செய்வதென்று தெரியாமல், இருந்த நிம்மதியையும் இழந்து தவித்துக்கொண்டிருக்கிறார், அந்த பிரபல பெண்மணி!

- உஷாரு வரும். 

Next Story