அக்கா இறந்த அதிர்ச்சியில் தங்கை பரிதாப சாவு ஒரே நேரத்தில் உடல்கள் அடக்கம்
அக்கா இறந்த அதிர்ச்சியில் தங்கை பரிதாபமாக இறந்தார். இருவரது உடல்களும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்டன.
ஆறுமுகநேரி,
அக்கா இறந்த அதிர்ச்சியில் தங்கை பரிதாபமாக இறந்தார். இருவரது உடல்களும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்டன.
அக்கா – தங்கைதூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த மொகதும் முகமது என்பவருடைய மனைவி சித்தி உசைனா (வயது 64). இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள். மொகதும் முகமது ஏற்கனவே இறந்துவிட்டார். 2 மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. சித்தி உசைனா தன்னுடைய மகள்களுடன் வசித்துவந்தார்.
சித்தி உசைனாவின் உடன்பிறந்த தங்கை பிர்தவுஸ் (55). அக்கா–தங்கை இருவரும் அருகருகே உள்ள தெருக்களில் வசித்துவந்ததால் ஒருவருக்கொருவர் சிறு உதவிகளை செய்துவந்ததுடன், ஆறுதலாகவும் இருந்துவந்தனர்.
திடீர் சாவுஇந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் சித்தி உசைனாவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த தகவல், அவருடைய தங்கை பிர்தவுசுக்கு தெரிவிக்கப்பட்டது.
அக்கா இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிர்தவுஸ், அக்கா வீட்டுக்கு ஓடோடி வந்தார். அக்கா உடலை பார்த்து கதறி அழுதார். அப்படியே அவரது உடலுக்கு அருகில் சோகத்துடன் கண்ணீர்விட்டபடி அமர்ந்து இருந்தார். சித்தி உசைனா உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்யத் தொடங்கினர்.
ஒரே நேரத்தில் அடக்கம்நேற்று அதிகாலை 5 மணி அளவில், பிர்தவுஸ் தன்னுடைய வீட்டுக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றார். தனது வீட்டுக்கு வந்த பிர்தவுஸ், திடீரென்று மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை அவரது முகத்தில் தெளித்தனர். ஆனால் அவரிடம் எந்தவொரு அசைவும் இல்லை.
அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரது உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், பிர்தவுஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். இதையடுத்து அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்தனர். அக்கா–தங்கை இருவரது உடல்களும் காயல்பட்டினத்தில் நேற்று இரவு அருகருகே அடக்கம் செய்யப்பட்டது.
அக்கா இறந்த அதிர்ச்சியில் தங்கையும் இறந்த சம்பவம் காயல்பட்டினத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.