பாதாள சாக்கடை குழாய் விரிசலால் ஆதம்பாக்கம் சாலையில் திடீர் பள்ளம் போக்குவரத்து பாதிப்பு


பாதாள சாக்கடை குழாய் விரிசலால் ஆதம்பாக்கம் சாலையில் திடீர் பள்ளம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2017 4:00 AM IST (Updated: 12 Jun 2017 12:19 AM IST)
t-max-icont-min-icon

ஆதம்பாக்கத்தில் பாதாள சாக்கடை குழாயில் விரிசல் ஏற்பட்டதால் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல் பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. பாதாள சாக்கடை குழாய்களில் அடிக்கடி விரிசல் ஏற்பட்டு சாலைகளில் பள்ளம் ஏற்படுவது வழக்கம். இந்த நேரங்களில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படும்.

இந்தநிலையில் நேற்று மாலை ஆதம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டது. பாதாள சாக்கடை குழாயில் விரிசல் ஏற்பட்டதால் சுமார் 8 அடிக்கு இந்த பள்ளம் ஏற்பட்டது. இதை கண்ட அப்பகுதியினர் உடனடியாக மாநகராட்சி மற்றும் மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் கீதா, உதவி பொறியாளர் சேதுராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதிகளில் தடுப்புகள் அமைத்து சாலையில் போக்குவரத்தை துண்டித்தனர். இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி ஆலந்தூர் மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது.

இதற்கிடையே ஆலந்தூர் தி.மு.க. எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பள்ளத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ. உடனே குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் யாரும் வரவில்லை. சுமார் 4 மணி நேர தாமதத்திற்கு பின்னரே குடிநீர் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.


Next Story