தரிகெரே அருகே 12–ம் நூற்றாண்டில் பயன்படுத்திய 50 பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு
தரிகெரே அருகே, கி.பி. 12–ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட 50 பீரங்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
சிக்கமகளூரு,
தரிகெரே அருகே, கி.பி. 12–ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட 50 பீரங்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
குடிநீர் தொட்டி கட்ட...சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா எகட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த அங்கன்வாடி மையத்திற்கு அருகில் குடிநீர் தொட்டி கட்ட பஞ்சாயத்து சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தொடங்கின. அந்த அங்கன்வாடி மையத்தின் அருகே குடிநீர் தொட்டி கட்ட தொழிலாளர்கள் குழிதோண்டி கொண்டு இருந்தனர்.
விசாரணைஅப்போது திடீரென சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் மேலும் குழிதோண்டியபோது 50 கற்கள் உருண்டை வடிவில் இருந்தன. அந்த கற்களை தொழிலாளர்கள் எடுத்து பார்த்தபோது அது கனமாக இருந்தது. இதுகுறித்து தொழிலாளர்கள் கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இந்த கற்கள் கிடைத்த சம்பவம் கிராமத்திற்குள் காட்டுத்தீ போல் பரவியது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம பஞ்சாயத்து அதிகாரிகளும், பொதுமக்களும் அந்த 50 கற்களையும் ஆச்சரியமாக பார்த்தனர். இதுகுறித்து அறிந்த தரிகெரே போலீசார் அங்கு விரைந்து வந்து கற்களை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் அந்த கற்களை தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதனையடுத்து அந்த கற்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் வைக்கப்பட்டன.
போலீஸ் சூப்பிரண்டிடம் ஒப்படைப்புஇந்த நிலையில் நேற்று முன்தினம் எகட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் அந்த கற்களை கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து எடுத்து வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலையை நேரில் சந்தித்து அவரிடம் கற்களை ஒப்படைத்தனர்.
இதையடுத்து அண்ணாமலையின் உத்தரவின்பேரில் போலீசார் மைசூருவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி துறையினரிடம் அந்த 50 கற்களையும் ஒப்படைத்தனர்.
பீரங்கி குண்டுகள்அந்த கற்களை தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் சோதனை செய்த போது அது கி.பி. 12–ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டுகள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த குண்டுகளை ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்து வருகிறார்கள்.
கி.பி. 12–ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட 50 பீரங்கி குண்டுகள் கிடைத்த சம்பவம் எகட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.