மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் தனியார் நிறுவனங்களுக்கு, கலெக்டர் அறிவுரை


மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் தனியார் நிறுவனங்களுக்கு, கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 12 Jun 2017 4:00 AM IST (Updated: 12 Jun 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு மற்றும் உரிமைகள் வழங்கி பாகுபாடு களைவதை உறுதி செய்யும் விதமாக தனியார் நிறுவன உரிமையாளர்களுக்கு உணர்வூட்டும் பயிற்சி முகாம் விழுப்புரம் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத் வரவேற்றார். இந்திய தொழுநோயாளிகள் அறக்கட்டளை திட்ட மேலாளர் ராம்ராபர்ட், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் மணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராஜகணேஷ், விழுப்புரம் வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் ரமேஷ், பொருளாளர் கலைமணி, விழுப்புரம் ரோட்டரி சங்க தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலெக்டர் சுப்பிரமணியன் பேசியதாவது:-

வேலைவாய்ப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்து நிரந்தரமாக வருவாய் ஈட்டும் வகையில் உதவி செய்ய வேண்டும். மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடந்த 6 மாதங்களில் 325 மாற்றுத்திறனாளிகளுக்கு பல சிறு தொழில்கள் தொடங்க ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அவர்கள் சிறுதொழில்கள் தொடங்கி சம்பாதிக்கும் சூழ்நிலை உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர 100 பேருக்கு தலா ரூ.35 ஆயிரம் கடன் உதவி பெற்றுக்கொடுத்து ஒரு நிரந்தர வருவாய் ஈட்டும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட தொழில் மையம் மூலம் 9 பேருக்கு ரூ.3 லட்சத்து 63 ஆயிரம் நிதி உதவி வழங்கி சுயதொழில் செய்ய உதவி செய்யப்பட்டுள்ளது.

அரசால், மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அனைத்தும் முழுமையாக செய்யப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனத்தினர் ஒவ்வொருவரும் படித்த மாற்றுத்திறனாளிகள் 3 பேரையாவது தங்கள் நிறுவனங்களில் ஏதாவது ஒரு வகையில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க முன்வர வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மிகவும் திறமையானவர்கள். அவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகின்றனர். அவர்கள் 100 சதவீதம் ஈடுபாட்டுடனும், முழு அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றுவார்கள். எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார். இதில் தனியார் நிறுவன உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அவர் பேசினார். முகாமின் முடிவில் முடநீக்கு வல்லுனர் கண்ணன் நன்றி கூறினார்.

Next Story