தாலுகா அலுவலக கட்டிடம் கட்ட அனைத்துக் கட்சி கூட்டம் அமைச்சர் தலைமையில் நடந்தது


தாலுகா அலுவலக கட்டிடம் கட்ட அனைத்துக் கட்சி கூட்டம் அமைச்சர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 12 Jun 2017 4:15 AM IST (Updated: 12 Jun 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம் தாலுகா அலுவலக கட்டிடத்தை எங்கே கட்டுவது? என்பது குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று அமைச்சர் தங்கமணி தலைமையில் நடந்தது.

குமாரபாளையம்,

குமாரபாளையம் தாலுகா அலுவலகம் கடந்த ஓராண்டாக குமாரபாளையம் நகராட்சிக்கு சொந்தமான அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது புதிய தாலுகா அலுவலகம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.

இந்த நிலையில் புதிய தாலுகா அலுவலகத்தை எங்கே? கட்டுவது என்பது குறித்த அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, தாசில்தார் ரகுநாதன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

ரூ.80 ஆயிரம் வாடகை

இக்கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசும்போது கூறியதாவது:- குமாரபாளையம் தாலுகா அலுவலகம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. தற்போது வருவாய்த்துறை சார்பில் குமாரபாளையம் நகராட்சிக்கு மாத வாடகையாக ரூ.80 ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது. தாலுகா அலுவலகம், போக்குவரத்துத்துறை அலுவலகம், கருவூலம், விவசாயம் சார்ந்த அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகம் ஒரே வளாகத்தில் அமைய சுமார் 5 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.

குமாரபாளையம் சுற்று வட்டார பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் அல்லது தனியார் தானம் செய்ய விரும்பும் நிலம் ஏதேனும் இருப்பின், அது குறித்து தெரிவித்தால் அந்த நிலம் தாலுகா அலுவலகம் கட்ட போதுமானதாகவும், தகுதியானதாகவும் இருந்தால் விரைவில் கட்டப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கோவில் நிலம்

பின்னர் குமாரபாளையம் கோட்டைமேடு பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் மற்றும் பெருமாள் கோவில் நிலத்தில் தாலுகா அலுவலகம் கட்ட வேண்டும் எனவும், வெப்படை, கலியனூர் பகுதியில் அமைப்பது தொடர்பாகவும் பலர் கருத்து தெரிவித்தனர். சிலர் தாலுகா அலுவலகம் தவிர இதர அலுவலகத்தை வெவ்வேறு இடங்களில் அமைக்கலாம் எனவும் கருத்து தெரிவித்தனர். அதன்பின்பு தாலுகா அலுவலகத்தை எங்கே அமைப்பது எனவும், அந்த நிலம் தொடர்பான வழக்கு விவரங்கள் குறித்து அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் கலந்து ஆலோசித்து மாவட்ட வருவாய் அலுவலரிடமோ அல்லது தாசில்தாரிடமோ வழங்கும்படி தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அ.தி.மு.க. (அம்மா அணி) சார்பில் நகர செயலாளர் நாகராஜன், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் பாலசுப்பிரமணி, பள்ளிபாளையம் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் செந்தில், தி.மு.க. சார்பில் குமாரபாளையம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் எஸ்.சேகர், நகர செயலாளர் வெங்கடேசன், த.மா.கா சார்பில் செல்வராஜ், ரவிச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரபாகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பாலுச்சாமி, சண்முகம், ம.தி.மு.க. விஸ்வநாதன் உள்பட அனைத்துக் கட்சி சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story