திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு பஸ்களை சிறைபிடித்த பொதுமக்கள்


திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு பஸ்களை சிறைபிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 12 Jun 2017 3:40 AM IST (Updated: 12 Jun 2017 3:40 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு 4 பஸ்களை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சின்னாளபட்டி,

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் ஏ.வெள்ளோடு பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிறுமலை அடிவாரத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் போதிய அளவு மழை பெய்யாததால் சிறுமலை அடிவாரத்தில் உள்ள கிணறு தண்ணீரின்றி வறண்டது. இதனால் காவிரி கூட்டுக்குடிநீர் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் 40 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீர் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை.

சிறைபிடிப்பு

இதனால் தண்ணீரை தேடி பொதுமக்கள் தோட்டங்களுக்கு படையெடுக்கின்றனர். மேலும் லாரி, டிராக்டர்களில் கொண்டு வரப்படும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே தங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதையொட்டி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பஸ் சிறைபிடிப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் தண்டோரோ அடித்து போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று மேள, தாளம் முழங்க பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஏ.வெள்ளோடு பஸ் நிறுத்தத்தில், திண்டுக்கல் செல்ல இருந்த 4 பஸ்களை காலிக்குடங்களுடன் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மையநாயக்கனூர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அது பலனளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து திண்டுக்கல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இஸ்மாயில் சேட், ஊராட்சி செயலர் ஜான்போஸ்கோ உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சிறுமலை அடிவார பகுதிகளில் புதிதாக 4 ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக் கப்படும் என்றும், தற்காலிகமாக லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story