புதுச்சேரி அருகே விபத்து: ரோட்டை கடக்க முயன்ற பெண் பஸ் மோதி சாவு பொதுமக்கள் மறியல்; பரபரப்பு


புதுச்சேரி அருகே விபத்து: ரோட்டை கடக்க முயன்ற பெண் பஸ் மோதி சாவு பொதுமக்கள் மறியல்; பரபரப்பு
x
தினத்தந்தி 12 Jun 2017 4:41 AM IST (Updated: 12 Jun 2017 4:41 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அருகே ரோட்டை கடக்க முயன்ற போது பஸ் மோதி பெண் பரிதாபமாகச் செத்தார். வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலம் அரியூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் குமாரி (வயது 55). பழச்சாறு விற்பனை கடை நடத்தி வந்தார். நேற்று அவர் காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற அரியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ஆஸ்பத்திரி அருகே சென்றதும் ரோட்டை கடக்க முயன்றார்.

அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ஒரு தனியார் பஸ் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் குமாரி தலை நசுங்கி அந்த இடத்திலேயே பரிதாபமாகச் செத்தார்.

சாலை மறியல்

இதைப்பார்த்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். இந்த பகுதியில் பஸ்கள் அதிக வேகமாக செல்வதாகவும், மக்கள் நெருக்கம் மிகுந்த இந்த இடத்தில் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என்றும் புகார் செய்தனர். விபத்து நடந்த இடத்தில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அ தனால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விபத்தை தடுக்க அந்த பகுதியில் தடுப்புகள் அமைக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story