மத்திய அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது


மத்திய அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது
x
தினத்தந்தி 12 Jun 2017 4:51 AM IST (Updated: 12 Jun 2017 4:51 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது என்று தமிழக அரசுக்கு பா.ஜனதா எம்.பி. மேக்ராஜ்ஜெயின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கருப்பூர்,

மத்திய அரசின் ஊரக மின்மயமாக்கல் கழகம் சார்பில், “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்“ என்ற தலைப்பில் கருத்தரங்கு, மத்திய அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் சம்பத் தலைமை தாங்கி பேசினார். ஊரக மின்மயமாக்கல் கழக மேலாளர் ஜெயந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கை மத்திய பிரதேச மாநில பா.ஜனதா எம்.பி. மேக்ராஜ்ஜெயின் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசும் போது, ‘தமிழகத்தில் கிராமங்கள் அனைத்தும் மின் வசதி பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இங்குள்ள மின் திட்டங்களை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு தீன்தயாள் கிராம ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.924 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பாஜனதா தலைமையிலான அரசில் கடந்த மூன்றாண்டு காலத்தில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது‘ என்றார்.

தமிழக அரசுக்கு பாராட்டு

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை எந்த அளவிற்கு சென்றடைந்துள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது.
மேலும் நாடு முழுவதும் வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதை கருத்தில் கொண்டு பாராளுமன்ற வேளாண் நிலைக்குழு பல்வேறு விவசாய அமைப்புகளை உள்ளடக்கி, குறைந்த நீரை பயன்படுத்தி விவசாயம் செய்வது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.

வயது முதிர்ந்த மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதை மத்திய அரசு தடுக்கவில்லை. அதை காரணம் காட்டி வயது குறைவான மாடுகளும் வெட்டப்படுவதால் பால் உற்பத்தி குறையும். மாடுகளின் கழிவுகளை கொண்டு இயற்கை உரம் தயாரிப்பது குறித்து விவசாயிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story