சேலம் பெண் மர்ம சாவு: உடலை வாங்க மறுத்து பெற்றோர், உறவினர்கள் போராட்டம்


சேலம் பெண் மர்ம சாவு: உடலை வாங்க மறுத்து பெற்றோர், உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2017 5:08 AM IST (Updated: 12 Jun 2017 5:07 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கொண்டலாம்பட்டியில் பெண் மர்மமான முறையில் இறந்ததால் அவரது உடலை வாங்க மறுத்து

சேலம்,

 பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவியது.

தூக்கில் பெண் பிணம்

சேலம் கொண்டலாம்பட்டி தமிழரசு கழகம் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 28), டிரைவர். இவருடைய மனைவி கோமதி (23). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். கோமதியை வரதட்சணை கேட்டு அவரது கணவர் யுவராஜ் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் வீட்டில் கோமதி தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவலறிந்த கோமதியின் தந்தை முத்துசாமி மற்றும் உறவினர்கள் உடனடியாக அங்கு சென்றனர். பின்னர், அவர்கள் அங்கிருந்த கோமதியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றி அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பிறகு கோமதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சாவில் சந்தேகம் என புகார்

அப்போது, கோமதியின் பெற்றோர் தங்களது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதனால் கோமதியின் கணவர் யுவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதையடுத்து வரதட்சணை கொடுமையால் கோமதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை கொலை செய்து தூக்கிலிட்டனரா? என்பது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், கோமதியின் தந்தை முத்துசாமி, தாய் வசந்தா, சகோதரி தமிழ்செல்வி மற்றும் உறவினர்கள் பலர் நேற்று காலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.

உடலை வாங்க மறுத்து போராட்டம்

அப்போது, கோமதியின் சாவு, தற்கொலையா? கொலையா? என்று தெரியும் வரையிலும் அவரது உடலை வாங்க மாட்டோம் என்று அங்கிருந்த போலீசாரிடம் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆவேசமாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு பிரேத பரிசோதனை செய்து அதன் அறிக்கை வந்தால் மட்டுமே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும் என்று உறவினர்களிடம் போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே யுவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் சிலர் ஆஸ்பத்திரிக்கு திடீரென வந்தனர். பின்னர் கோமதியின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் தயாராகினர். அப்போது, கோமதியின் உடலை அவரது தந்தை முத்துசாமி வீட்டாரும், கணவர் யுவராஜ் வீட்டாரும் தங்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று போலீசாரிடம் வலியுறுத்தினர்.

வாக்குவாதம்

இதனால் அவரது உடலை வாங்குவதில் தந்தை-கணவர் வீட்டார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, இருதரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்தினர். முடிவில் கோமதியின் உடல் அவரது தந்தை முத்துசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், கோமதிக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் சேலம் உதவி கலெக்டர் குமரேஸ்வரன், சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து யுவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும், கோமதியின் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்டார்.

Next Story