திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 13 Jun 2017 4:15 AM IST (Updated: 13 Jun 2017 1:34 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்து முறையிட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.
கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி 18-வது வார்டு பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

18-வது வார்டுக்கு உட்பட்ட ராக்கியாக்கவுண்டன்புதூர் அருகே சமத்துவபுரம் எதிரில் வாவிபாளையம், பாப்பநாயக்கனூர், ஜெய்ஸ்ரீநகர் செல்லும் ரோட்டில் காமாட்சியம்மன் நகரில் புதிதாக கட்டியுள்ள ஒரு கட்டிடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அரசு பள்ளிகள், வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் ரோட்டில் இந்த கடை அமைய உள்ளதால் இந்த பகுதி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதை கருத்தில் கொண்டு ஏற்கனவே நாங்கள் சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளரிடம் எதிர்ப்பு தெரிவித்தோம். அதற்கு அவர் டாஸ்மாக் கடைக்கு கட்டிடம் கொடுக்க மாட்டேன் என்று தெரிவித்தார். ஆனால் தற்போது அந்த கட்டிடத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

பொங்குபாளையம்

மாநகராட்சியின் 7, 8, 9, 10-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், அங்கேரிப்பாளையம் மெயின் ரோட்டில் 8-வது வார்டுக்கு உட்பட்ட சிங்காரவேலன் நகரில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த பள்ளிக்கு அருகே தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. எனவே இந்த கடையை அகற்றக்கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். கடை அகற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்த பின்னரும் இதுவரை அந்த டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பொங்குபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை, பார் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம், போராட்டத்தை நடத்தியுள்ளோம். இதுவரை அந்த கடை அகற்றப்படாமல் உள்ளது. எனவே எங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடை மற்றும் பாரை உடனடியாக மூட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

சேரன் தொழிலாளர் காலனி

திருப்பூர் மாநகராட்சி 37-வது வார்டுக்கு உட்பட்ட சேரன் தொழிலாளர் காலனியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா செய்தனர்.

பின்னர் அவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆனால் எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று ஏற்கனவே திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டோம். இருப்பினும் கடையை திறப்பதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது. எனவே எங்கள் பகுதியில் அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கான அனுமதியை ரத்து செய்து கடை அமைவதை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Next Story