காவிரி பிரச்சினையில் நியாயம் கிடைக்க கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் போராட வேண்டும்


காவிரி பிரச்சினையில் நியாயம் கிடைக்க கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் போராட வேண்டும்
x
தினத்தந்தி 13 Jun 2017 4:15 AM IST (Updated: 13 Jun 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

காவிரி பிரச்சினையில் நியாயம் கிடைக்க கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று பழ.நெடுமாறன் கூறினார்.

ஸ்ரீரங்கம்,

தமிழ் தேசிய வீர சங்கம் சார்பில் ஜம்புதீவு பிரகடன வரலாற்று புரட்சி விழா நேற்று ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மருதுபாலா தலைமை தாங்கினார். தமிழ் தேசிய முன்னணி நிறுவனர் பழ.நெடுமாறன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன், கொங்கு மண்டல இளைஞர் பேரவை தனியரசு எம்.எல்.ஏ., சுடர்மதி ஆகியோர் பேசினர்.

விழாவில் ஜம்புதீவு பிரகடன புகைப்படம் மற்றும் சி.டி. வெளியிடப்பட்டது. முன்னதாக தமிழ் தேசிய வீர சங்க ஆலோசகர் முருகேசன் வரவேற்றார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து நன்றி கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம்

பின்னர் தமிழ் தேசிய முன்னணி நிறுவனர் பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. தொடர்ந்து 6 ஆண்டுகளாக நமது விவசாயிகள் சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு ஆளாகி உள்ளனர். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது போல் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடையாது.

அரசியல் காரணங்களுக்காக, நடைபெற இருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கிறது. இந்த பிரச்சினையில் நமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால் தமிழகத்தில் கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story