அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நரிக்குறவர்கள் தர்ணா போராட்டம்


அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நரிக்குறவர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2017 4:45 AM IST (Updated: 13 Jun 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நரிக்குறவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் அளித்தனர். மொத்தம் 676 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தர்ணா போராட்டம்

திருவண்ணாமலையை அடுத்த மெய்யூர் அருகேயுள்ள ஓம்சக்தி நகரை சேர்ந்த நரிக்குறவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் 50 மாணவ-மாணவிகள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தங்கள் பகுதியில் தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி எதுவும் செய்து தரப்படவில்லை. பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே கலெக்டரை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிப்பதாகவும், அதுவரை தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சிறிதுநேரத்தில் குறைதீர்வு கூட்டத்துக்கு வந்த கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவை நரிக்குறவர்கள் சங்க தலைவர் தேவா தலைமையில் 5 பேர் சந்தித்து மனு அளித்து குறைகளை தெரிவித்தனர். அதற்கு கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஓம்சக்தி நகருக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அனைத்து வசதிகளையும் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து நரிக்குறவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இடத்தை அளந்து தர வேண்டும்

போளூர் தாலுகா காங்கிரானந்தல் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அளித்த மனுவில், காங்கிரானந்தல் கிராமத்தில் முஸ்லிம் மக்களுக்கு சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் சுடுகாடு மற்றும் குட்டை உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த இடம் தொடர்பாக பிரச்சினை ஏற்படுகிறது. எனவே எங்களுக்கு சொந்தமான இடத்தை அளந்து ஒதுக்கி தரும்படி அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால் அதிகாரிகள் இதுவரை அந்த இடத்தை அளந்து எங்களுக்கு ஒதுக்கி தரவில்லை. எனவே கலெக்டர் இதுதொடர்பாக போளூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டு காங்கிரானந்தல் கிராமத்தில் உள்ள இடத்தை அளந்து எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கலெக்டரிடம் மனு அளித்து விட்டு வெளியே வந்த முஸ்லிம்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழுகை நடத்தினர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பெண் மயங்கி விழுந்தார்

இந்த நிலையில் கலெக்டரிடம் மனு அளிக்க வரிசையில் நின்று கொண்டிருந்த திருவண்ணாமலை அண்ணாநகர் 9-வது தெருவை சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 55) என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

அவர் வைத்திருந்த மனுவில், எனக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்புள்ள வீட்டை மோசடி செய்து ஏமாற்றி அபகரித்து கொண்டதாகவும், தற்போது வீட்டை விட்டு வெளியே செல்லும்படி அடியாட்களை வைத்து மிரட்டி வருகிறார்கள். எங்களை வீட்டை விட்டு வெளியே விரட்டும் நபர்கள் மற்றும் ரவுடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது வீட்டை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்து மக்கள் கட்சி திருவண்ணாமலை மாவட்ட தலைவர் விஜயராஜ் அளித்த மனுவில், தமிழக அரசு முஸ்லிம் மக்கள் ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசலுக்கு அரிசி வழங்கி வருகிறது. அதேபோல் இந்துமக்கள் கொண்டாடும் ஆடிமாத கஞ்சி வார்த்தல் மற்றும் கூழ் ஊற்றும் திருவிழாவிற்கு அரிசி, கம்பு, கேழ்வரகு, தானியம் 25 ஆயிரம் மெட்ரிக் டன் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் மழலையர், ஆரம்பப்பள்ளியில் தாய்மொழி தமிழை மட்டுமே பயிற்று மொழியாக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனி மற்றும் அனைத்து துறைகளையும் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story