பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளில் கட்டண விவரங்களை எழுதி வைக்க வேண்டும்


பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளில் கட்டண விவரங்களை எழுதி வைக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Jun 2017 4:00 AM IST (Updated: 13 Jun 2017 3:44 AM IST)
t-max-icont-min-icon

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளில் கட்டண விவரங்களை எழுதி வைக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை,

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் அனிஷ் சேகர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்குள்ள கட்டண கழிப்பறையில் கட்டணங்கள் முறையாக வசூலிக்கப்படுகிறதா என விசாரித்தார். தொடர்ந்து, அனைத்து கட்டண கழிப்பறைகளிலும் பொதுமக்கள் பார்வையில் படுமாறு கட்டண பட்டியல் விவரங்களை வைக்க வேண்டும் என்றும், கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் ஒரு கழிப்பறை மகளிர் சுயஉதவி குழுவினர்களின் பெயரில் குத்தகைக்கு எடுத்து வேறு நபர்கள் கழிப்பறைகளில் வசூல் செய்வதை கண்டறிந்த ஆணையாளர், சம்பந்தப்பட்ட சுயஉதவிக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.

வாகன காப்பகம்

அதனைத் தொடர்ந்து, ஆணையாளர் இருசக்கர வாகன காப்பகத்தில் வாகனங்களுக்கு வசூலிக்கும் கட்டண விவரங்களை கேட்டறிந்து, வாகன காப்பக ரசீதுளை ஆய்வு செய்தார். தொடர்ந்து மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறைகளையும் உரிமையாளர்களின் உரிமத்தையும் ஆய்வு செய்தார். மாட்டுத்தாவணி பின்புறம் உள்ள கனரக வாகன நிறுத்துமிடத்தில் ஆய்வு செய்து வாகனங்கள் நிறுத்துவதற்கு வசூலிக்கப்படும் வாடகையையும் அதற்குண்டான பதிவேடுகளையும் பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் உள்ள தரைக்கடைக்காரர்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்தார். புதிதாக கட்டப்பட்டு வரும் மொத்த பழக்கடைகளையும் ஆணையாளர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர்கள் பழனிச்சாமி, ரங்கராஜன், செயற்பொறியாளர் ராஜேந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story