தூத்துக்குடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


தூத்துக்குடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 12 Jun 2017 11:58 PM GMT (Updated: 12 Jun 2017 11:58 PM GMT)

தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, ரேசன் கார்டுகள், கல்விக்கடன், தொழிற்கடன், சுயஉதவிக்குழுக்கான கடன் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில், தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த ஏழை மகளிர்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய ஆட்டோ வழங்கும் திட்டத்தின் கீழ் புதுவாழ்வு திட்டம் மூலம் விளாத்திக்குளம் தாலுகா வீரபாண்டியபுரம் பஞ்சாயத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்கு ரூ.2.70 லட்சம் மதிப்பிலான ஆட்டோ மற்றும் கயத்தார் தாலுகா, கரடிகுளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த உமா மகேசுவரி என்பவருக்கு ரூ.2.70 லட்சம் மதிப்பிலான ஆட்டோ என மொத்தத்தில் ரூ.5.40 லட்சம் மதிப்பீட்டில், 25 சதவீதம் மாவட்ட தொழில் மையத்தின் மானியத்துடன் வழங்கப்பட்டன.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 6 நலிந்த கலைஞர்களுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 500 என மொத்தம் ரூ.45 ஆயிரத்திற்கான காசோலைகள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் வழங்கப்பட்டது.

உறுதி மொழி

முன்னதாக, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கலெக்டர் வெங்கடேஷ், தலைமையில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story