முன்விரோதத்தில் கோஷ்டி மோதல் 2 பேர் படுகாயம்; சாலை மறியல்


முன்விரோதத்தில் கோஷ்டி மோதல் 2 பேர் படுகாயம்; சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Jun 2017 4:30 AM IST (Updated: 14 Jun 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி அருகே முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, கடந்த 4-ந்தேதி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அரையப்பட்டியை சேர்ந்த இளைஞர்களுக்கும், வன்னியன் விடுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் 2 பிரிவினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனால் 2 பிரிவினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

கோஷ்டி மோதல்

இந்நிலையில் அரையப்பட்டியை சேர்ந்த கோபிநாத் (வயது 22) என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வன்னியன்விடுதியை சேர்ந்த சுப்பிரமணியன், பாண்டியன், அருண்பாண்டி ஆகியோர் கோபிநாத்தை கோவில் திருவிழாவில் நடந்த முன்விரோதம் காரணமாக தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதைக்கண்ட கோபிநாத்தின் உறவினர்கள், சுப்பிரமணியன் உள்ளிட்ட 3 பேரையும் தாக்கியதால் இரு பிரிவினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த வன்னியன் விடுதி இளைஞர்கள் அரையப்பட்டி காலனிக்கு சென்று, அங்குள்ள ஒரு வீட்டின் வெளியே இருந்த சைக்கிள், மற்றும் பாத்திரங்களை அடித்து நொறுக்கினர். இதைக்கண்டு அங்கிருந்த பெண்கள், சிறுவர்கள் அலறி அடித்து ஓடினர்.

2 பேர் படுகாயம்

பின்னர் அவர்கள் அரையப்பட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (30), மாரியப்பன் (29) ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கினர். இதனால் 2 பேரும் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாலைமறியல்

இதையடுத்து படுகாயமடைந்த இளைஞர்களின் உறவினர்கள், அரையப்பட்டி பஸ் நிறுத்தத்தில் தாக்குதல் நடத்திய வன்னியன்விடுதியை சேர்ந்த இளைஞர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் முத்தலீப், வட்டாட்சியர்(பொறுப்பு) யோகேஸ்வரன் மற்றும் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் மீது உடடினயாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story