கிரிக்கெட் சூதாட்ட தரகர் மர்மச்சாவு ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கினார்


கிரிக்கெட் சூதாட்ட தரகர் மர்மச்சாவு ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கினார்
x
தினத்தந்தி 14 Jun 2017 3:45 AM IST (Updated: 14 Jun 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

ரூ.80 லட்சம் கடனில் சிக்கித்தவித்த கிரிக்கெட் சூதாட்ட தரகர் மர்மமான முறையில் தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

வசாய்,

தானே மாவட்டம் மிராபயந்தர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் தயானந்த் ஜெயின்(வயது50). இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டி, ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து சூதாட்டம் நடத்தி வந்ததாக பிரபலமாக அறியப்பட்டவர்.

தயானந்த் ஜெயின் பலரிடம் ரூ.80 லட்சம் வரை கடன் வாங்கியிருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிகேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து உள்ளார்.

தூக்கில் தொங்கினார்

இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் பயந்தர் கிழக்கில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். நேற்றுமுன்தினம் வெகுநேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதை கவனித்த ஓட்டல் ஊழியர்கள் அறையின் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர் மாற்றுச்சாவி மூலம் கதவை திறந்து பார்த்தனர். அப்போது, அறையில் உள்ள மின்விசிறியில் தயானந்த் ஜெயின் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார்.

சாவில் மர்மம்

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர் நவ்கர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனை நடத்திய போது கடிதம் ஒன்று சிக்கியது. அதில், கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுப்பதாக எழுதப்பட்டிருந்தது.

அந்த கடிதத்தை போலீசார் அவரது குடும்பத்தினரிடம் காட்டியபோது, அது தயானந்த் ஜெயினின் கையெழுத்து இல்லை என்று அவர்கள் கூறினர். மேலும் அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story