மராட்டியத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு 88.74 சதவீத மாணவர்கள் தேர்ச்சி கொங்கன் மண்டலம் முதலிடம்


மராட்டியத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு 88.74 சதவீத மாணவர்கள் தேர்ச்சி கொங்கன் மண்டலம் முதலிடம்
x
தினத்தந்தி 14 Jun 2017 5:00 AM IST (Updated: 14 Jun 2017 3:21 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியம் முழுவதும் எஸ்.எஸ்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது.

மும்பை,

இந்த தேர்வினை மாநிலம் முழுவதும் 16 லட்சத்து 44 ஆயிரத்து 16 பேர் எழுதினர். மும்பை கல்வி மண்டலத்தை பொறுத்த வரை 3 லட்சத்து 42 ஆயிரத்து 973 பேர் எழுதினர். இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில், தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 14 லட்சத்து 58 ஆயிரத்து 855 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது தேர்வு எழுதியவர்களில் 88.74 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவு ஆகும். கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருந்தனர்.

இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களில் 7 லட்சத்து 81 ஆயிரத்து 939 பேர் மாணவர்கள். 6 லட்சத்து 76 ஆயிரத்து 916 பேர் மாணவிகள். மாணவர்கள் 86.51 சதவீதமும், மாணவிகள் 91.46 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கொங்கன் முதலிடம்

3 லட்சத்து 49 ஆயிரத்து 485 மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற்று டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெற்றனர். 5 லட்சத்து 45 ஆயிரத்து 576 பேர் முதல் கிரேடிலும், 4 லட்சத்து 53 ஆயிரத்து 599 பேர் 2-ம் கிரேடிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மற்ற மாணவர்கள் 35 சதவீதத்திற்கு மேல் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கொங்கன் மண்டலத்தில் அதிகபட்சமாக 96.18 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் மந்திரியின் சொந்த ஊரான நாக்பூர் மண்டலம் 83.67 சதவீத தேர்ச்சி பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது.

மண்டல வாரியாக புனே- 91.95, அவுரங்காபாத்- 88.15, மும்பை- 90.09, கோலாப்பூர்- 93.59, அமராவதி- 84.34, நாசிக்- 87.76, லாத்தூர்- 85.22 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மும்பையில்...

மும்பையை பொறுத்தவரை தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 3 லட்சத்து 8 ஆயிரத்து 996 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மும்பையில் தேர்வு எழுதியவர்களில் 90.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேப்போல மாணவர்கள் 84.11 சதவீதமும், மாணவிகள் 91.78 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கிரேடு வாரியாக டிஸ்டிங்ஷனில் 72 ஆயிரத்து 710 மாணவர்களும், முதல் கிரேடு பெற்று 1 லட்சத்து 4 ஆயிரத்து 999 பேரும், 2-வது கிரேடில் 98 ஆயிரத்து 610 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 32 ஆயிரத்து 677 மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு முதல் கலை பிரிவில் சாதிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்களுடன் சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இந்த அடிப்படையில் நடனம், பாட்டு, படம் வரைதல் போன்றவற்றில் சாதித்த 81 ஆயிரம் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. விளையாட்டில் சாதித்ததாக 3 ஆயிரத்து 903 மாணவர்கள் சிறப்பு மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

தனித்தேர்வர்கள் முடிவு

தனித்தேர்வர்கள் 1 லட்சத்து 13 ஆயிரத்து 124 பேர் தேர்வு எழுதினர். இதில் 47 ஆயிரத்து 630 பேர் தேர்ச்சி பெற்றனர். தனித்தேர்வர்கள் 42.10 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மும்பையில் 41 ஆயிரத்து 983 தனித்தேர்வர்கள் தேர்வை எழுதினர்.

இதில், 18 ஆயிரத்து 160 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மும்பையில் தனித்தேர்வர்கள் 43.26 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.




Next Story