பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் மலர்விழி தகவல்
சிவகங்கை,
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம்(டாப்செட்கோ) மூலம் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
தொழில் கடன்சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(டாப்செட்கோ), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் இனத்தவர்களின் பொருளாதார நிலைமையினை மேம்படுத்த தொழில் செய்திட பல்வேறு திட்டங்களின்கீழ் குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தில் கடன் பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்களின் குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறமாக இருந்தால் ரூ.98 ஆயிரமும், நகர்ப்புறமாக இருந்தால் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்ப படிவம் மற்றும் கடன் திட்டங்கள் குறித்த விவரங்களை சென்னை அண்ணா சாலையில் உள்ள டாப்செட்கோவின் தலைமை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கலாம்இந்த திட்டத்தில் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய இடங்களில் இருந்து பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து தொழில் கடன் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.