சேலம் புதிய பஸ் நிலையத்தில் நெருக்கடி: மாற்று வழி ஏற்படுத்துவது குறித்து போலீஸ் கமிஷனர் நேரில் ஆய்வு


சேலம் புதிய பஸ் நிலையத்தில் நெருக்கடி: மாற்று வழி ஏற்படுத்துவது குறித்து போலீஸ் கமிஷனர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 14 Jun 2017 4:24 AM IST (Updated: 14 Jun 2017 4:24 AM IST)
t-max-icont-min-icon

சேலம் புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க மாற்றுவழி ஏற்படுத்துவது குறித்து போலீஸ் கமிஷனர் நேரில் ஆய்வு செய்தார்.

சேலம்,

சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது புதிய பஸ் நிலையம். சென்னையில் இருந்து கோவை செல்லவும், தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூரு செல்லவும் மையப்பகுதியாக சேலம் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இதனால் பகல், இரவு என 24 மணிநேரமும் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு பல்வேறு வழித்தடங்களில் இருந்து பஸ்கள் வந்து செல்லும்.
புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறந்தபோது சேலம் மாநகரில் இருந்த மக்கள்தொகையை விட தற்போது பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாகனங்களும் அதிகரித்து விட்டன. இதனால் புதிய பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள், பயணிகளை ஏற்றிக்கொண்டு வெளியில் செல்லும்போது ஸ்தம்பித்து நிற்கும் நிலை ஏற்படுகிறது.

மாற்றம் செய்ய திட்டம்

எனவே, சேலம் புதிய பஸ் நிலையத்தை எப்படி மாற்றம் செய்யலாம்? என ஒரு புதிய திட்டம் தயாரிக்கப்பட்டது. அப்போது சேலம் புதிய பஸ் நிலையத்தின் சேலம்-ஓமலூர் ரோட்டில் உள்ள நுழைவாயில் பகுதியில் உள்ள ஆர்த்தி ஓட்டலையொட்டி, பஸ்கள் உள்ளே செல்வதற்கு வழி ஏற்படுத்திடவும், அதுபோல பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தையொட்டி உள்ள இருசக்கர வாகன நிறுத்தம் வழியாக பஸ் நிலையம் செல்லவும் இரு புதிய வழிகள் ஏற்படுத்திடவும் ஆலோசிக்கப்பட்டன.

போலீஸ் கமிஷனர் ஆய்வு

இந்த நிலையில் நேற்று புதிய பஸ் நிலையத்தில் நெருக்கடியை தீர்க்க மாற்று ஏற்பாடு செய்வது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் தலைமையில் துணை கமிஷனர் ராமகிருஷ்ணன், போக்குவரத்து கழக மண்டல அதிகாரிகள் ராஜேந்திரன், சுப்பிரமணி, தனியார் பஸ் உரிமையாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் நேரடி ஆய்வு நடத்தினர்.

ஆய்வு குறித்து போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் கூறுகையில்,“சேலம் புதிய பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாமல் உள்ளது. எனவே, அதை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையத்திற்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க மாற்றுவழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாநகராட்சி நிர்வாகத்திடம் பேசி முடிவெடுக்கப்படும்“ என்றார்.

Next Story